புத்ரா ஜெயா, செப்.20
மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி வெள்ளியை முழுமையாகப் பயன்படுத்திவிட்டதாகக் கூறப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மித்ரா அமைக்கப்பட்டது முதல் தனது ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தியது இதுவே முதன் முறையாகும் என்று மித்ரா சிறப்பு செயற்குழு குழு தலைவர் டத்தோ ஆர்.ரமணன் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் , இந்திய சமூக- பொருளாதார மேம்பாட்டு பிரிவாகச் (செடிக்) செயல்பட்டபோது ஒதுக்கீட்டில் 35 விழுக்காட்டை மட்டுமே பயன்படுத்திய வேளையில் 2017 ஆம் ஆண்டு 57 விழுக்காட்டையும் 2018 ஆம் ஆண்டு வெறும் 1 விழுக்காட்டை மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
“ செடிக் 2018 ஆம் ஆண்டு மித்ராவாக உருமாற்றம் கண்ட பின்னர் 2019 ஆம் ஆண்டு 58 விழுக்காட்டு ஒதுக்கீட்டையும் 2020 ஆம் ஆண்டு 63 விழுக்காட்டு ஒதுக்கீட்டையும் 2021 ஆம் ஆண்டு 73 விழுக்காட்டு ஒதுக்கீட்டையும் 2022 ஆம் ஆண்டு 63 விழுக்காட்டு ஒதுக்கீட்டையும் பயன்படுத்தியது” என்றார் பிகேஆர் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அடிப்படையில் 2023 பட்ஜெட்டில் மித்ராவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி வெள்ளி இவ்வாண்டுக்காக பயன்படுத்தப்பட்டுவிட்டது” என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விவரித்தார்.
2022 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி வெள்ளியில் வெறும் 6 கோடி வெள்ளி மட்டுமே ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து விளக்கமளிக்கும்படி ஜசெக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இவ்வாண்டு மார்ச் மாதம் அரசாங்கத்திடம் வினவினார்.
2019 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை மித்ரா நிதியில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி 16 நிறுவனங்களின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குலசேகரன் இக்கேள்வியை எழுப்பினார்.
மித்ராவில் நிதி மோசடி தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி)2021 ஆம் ஆண்டு இப்பிரிவு மீது விசாரணை நடத்தியது.
மித்ரா மீதான களங்கத்தைப் போக்க இதன் கணக்குகள் யாவும் தேசிய கணக்காய்வு துறையினால் ஆய்வு செய்யப்படும் என்றார் ரமணன்.
இவ்வாண்டுக்கான மித்ரா நிதி பட்டப்படிப்பு மாணவர்களின் பட்டப்படிப்பு, தனியார் பாலர் பள்ளிகள், டைலசிஸ் சிகிட்சை போன்றவற்றிக்குப் பயன்படுத்தப்பட்டன. .
இவை தவிர்த்து, 72 மக்கள் பிரதிநிதி மையங்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்தியர்களுக்காக வறுமை ஒழிப்பு திட்டங்களை மித்ரா மேற்கொள்ளவிருப்பதாகவும் இது குறித்த விவரங்களை பிரதமர் விரைவில் அறிவிப்பார் என்றும் ரமணன் கூறினார்.
“2024 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்காக கூடுதல் நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒதுக்கீடு செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். எனினும், நாங்கள் எந்த திசையை நோக்கிச் செல்வது என்பதை பிரதமர் நிர்ணயிப்பார்” என்று ஸ்கூப் மின்னியல் ஊடகத்திடம் அவர் தெரிவித்தார் .
2018 பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது பிரதமர் துறை அலுவலகத்தின் கீழ் செயல்பட்ட மித்ரா இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்பட்ட ஷெராத்தோன் நடவடிக்கையைத் தொடர்ந்து 2020 ஏப்ரலில் தேசிய ஒற்றுமை துறைக்கு மாற்றம் கண்டது.
கடந்தாண்டு செப்டம்பரில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்தபோது மீண்டும் பிரதமர் துறைக்கே மித்ரா மாற்றம் கண்டு இன்று வரை இதே துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
