கோலாலம்பூர், செப்.19-
கீதையின் ராதை, புலனாய்வு, திருடாதே பாப்பா திருடாதே போன்ற வெற்றித் திரைப்படங்கள் வாயிலாக சாதனை படைத்த ஷாலினி பாலசுந்தரத்தின் இயக்கத்தில் மற்றுமொரு வெளியீடாக “விண்வெளி தேவதை” நாளை செப்.21 ஆம் தேதி திரையீடு காண்கிறது.
ஸ்டோரி ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் விண்வெளி தேவதை செப்.21 ஆம் தேதி சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு, கெடா, பேராக் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் 46 திரையரங்குகளில் அரங்கேறவிருக்கிறது.
ஷாலினி பாலசுந்தரத்தின் நான்காவது திரைப்படம் இது. இதற்கு முன்பு பல அருமையான தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் இவர்.
இந்த விண்வெளி தேவதை திரைப்படத்தில் ஹீரோ ஆரோ சக்கரவர்த்தி. ஹீரோயின் ஷாலினி பாலசுந்தரம் . இவர்களோடு இன்னும் பல நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
“நிறைய புது முகங்கள் இருந்தாலும் நடிப்பு எல்லாருக்கும் சிறப்பாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆரோவின் சோகக்காட்சி, மகிழ்ச்சியான காட்சி அடேங்கப்பா இவங்க எல்லாம் புது முகமே இல்ல என்று சொல்கிற அளவுக்கு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க ” என்றார் சுவாரா செனிமான் புரோடக்ஷன் கவிமாறன்.
மூன்று விதமான பருவ காலத்தைத் தொட்டு படத்தின் கதை அமைந்துள்ளது. இலட்சியத்தை நோக்கிப் போகிற ஒரு பெண்ணுடைய கதை. அவருடைய லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதை.
கதைக் கரு சுவாரசியமாகவும் இன்றைய இளைஞர்களுக்கு அதிகம் பிடித்தமான ஒன்றாகவும் அமைந்திருக்கும் அதே நேரத்தில் கதாநாயகி எடுத்துக்காட்டான ஒரு பெண்ணாக வலம் வருவதும் சிறப்பு. .
” பாடல்கள் அருமை. எடிட்டிங், சவுண்ட் எல்லாமே சிறப்பாகப் பண்ணிருக்காங்க. செப்டம்பர் 21 ஆம் தேதி ஒரு முறை இந்தத் திரைப்படத்தைப் . பாருங்கள். நிச்சயம் பாராட்டுவீர்கள்” என்று கவிமாறன் மேலும் சொன்னார்.
