Site icon அநேகன்

தமிழ்ப் பத்திரிகை உலகின் நாயகன் ஆதி. குமணனின் புகழ் நிலைத்திருக்கும்! – அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர் அக் 16-

மலேசிய தமிழ்ப் பத்திரிகை துறையில் புகழ் பெற்று விளங்கியவர் இளைய தமிழவேள்’ ஆதிகுமணன் என்பது யாவரும் அறிவர்.

இவரின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞர் பி. மலையாண்டி  ஆதி குமணன் வரலாற்று நூலை  எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்திய சமுதாயத்தில் போற்றப்படும் ஆதி குமணனின் வரலாற்று நூல் நிகழ்வுக்கு தலைமை தாங்குவதை எண்ணி தாம்  பெரும் மகிழ்ச்சி அடைவதாக மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

இலக்கியம், அரசியல், மருத்துவம், சமூகவியல், பத்திரிகைத் துறை, விளையாட்டு, சட்டத்துறை போன்றவற்றைச்  சார்ந்தவர்கள் ஆதி. குமணனைப் பற்றி வெளியிட்ட கருத்துகள் மற்றும் அவரைப் பற்றிய பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கிய பெட்டகமாக புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

ஆதி.குமணனின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் பத்திரிகைத் துறை போராட்டங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருக்கிறது. 

பினாங்கு பட்டர்வொர்த்தில் பிறந்த இந்த இலக்கிய ஆளுமை, நாட்டின் தலைநகரை மையமாகக் கொண்டு மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் ஒரு புதிய எழுச்சியைக் கொண்டு வந்தார்.

ஆரம்பக் கல்வியையும் பட்டப் படிப்பையும் தமிழ் நாட்டில் பெற்ற ஆதி. குமணன், புகழ்பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம்பெற்றார். 

அதன்பின் தாயகம் திரும்பிய ஆதி.குமணன், ஏதோவொரு எளிய வேலைக்காக தன்னுடைய தந்தை ஆதிமூலத்தால் நாட்டின் மையப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குறைந்தபட்சம் ஒரு கிராணி வேலைக்காக கோலாலம்பூருக்கு வந்த ஆதி.குமணன், பின்னர் தரணி யெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் போற்றும் பத்திரிகை ஆளுமையாக உருவெடுத்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை நடத்திய தமிழ் மலர் நாளிதழ்தான், ஆதி.குமணனின் பத்திரிகைப் பயணத்தைத் தொடக்கி வைத்தது.

1970 ஆம் ஆண்டு   தொடக்கத்தில் அந்த நாளிதழில் இணைந்த இவர், பின்னர் தமிழ் ஓசை நாளேட்டை வழிநடத்தி, அதன் பின்ன மலேசிய நண்பனை தன் வாழ்நாளின் இறுதிக்  கட்டம் வரை வழிநடத்தினார்.

இந்த காலக் கட்டத்தில், மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்ட, குறிப்பாக தமிழர்கள் சந்தித்த பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, ஆன்மிக பிரச்சினைகளுக்காக தன் பேனாமுனைவழி குரல்கொடுத்தார்.

இதனால், அவர் எதிர்கொண்ட போராட்டங்களும் வழக்குகளும் அதிகம் என்பதை மலேசியத் தமிழர்கள், குறிப்பாக தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

ஒரு சாதாரண பத்திரிகையாளரும் ஒரு பத்திரிகை முதலாளியாக உருவெடுக்க முடியும் என்பதை ஊருக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டியவர் ஆதி.குமணன் ஆவார் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.

டான்ஸ்ரீ சோமா அரங்கில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, டத்தோ டாக்டர் கு செல்வராஜ், டத்தோ பஞ்சமூர்த்தி, பெ. ராஜேந்திரன், வித்யாசாகர் , கோலாலம்பூர் வெற்றி சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை உட்பட பல இயக்கங்களின் பொறுப்பாளர்கள், வாசகர்கள் என  பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version