கோலாலம்பூர், அக்.16-
பணியிடங்களில் தொழிலாளர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதை மனிதவள அமைச்சு மிகவும் கடுமையாகக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றத்தைப் புரியும் முதலாளிகளுக்கு 50,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று எச்சரித்தார்.
குறிப்பாக, உடல் அல்லது மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதை அனுமதிக்க முடியாது.
பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக வேலை சட்டம் 1955 இல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இது 2023 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.
வேலையிடங்களில் பாகுபாடு சிக்கல்கள் தொடர்பான எந்தவொரு புகாரையும் கேட்டு முடிவெடுக்க வேலை வாய்ப்புச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது.
பணியிடத்தில் பாகுபாடு காட்டுவது தொடர்பாக ஆள்பல துறை தலைமை இயக்குநரின் முடிவைப் பின்பற்றத் தவறினால் குற்றமாகும் என்றார்.
மேலும், முதலாளிக்கு 50,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் சிவகுமார் எச்சரித்தார்.
இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 8 புகார்களை அமைச்சு பெற்றுள்ளது.
இதில் பாகுபாடு தொடர்பில் 2 புகார்களும் சம்பள விவகாரம் தொடர்பில் 6 புகார்களும் அடங்கும்.
அனைத்து புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அவர்.
