காஜாங், அக். 17-
தனி மனிதன் நினைத்துவிட்டால் ஒட்டுமொத்த சமுதாயத்தையே மாற்றிவிடலாம் என்கிறார் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்.
நாட்டில் இந்திய இளைஞர்கள் வழி தவறிப் போய் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக் காண மிகவும் வேதனையாக இருக்கிறது. இவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு தனி மனிதனும் நினைக்க வேண்டும். அப்போது நமது ஒட்டுமொத்த சமுதாயமும் செழிப்புற்றிருப்பதைக் காணலாம் என்றார்,
“தீய வழிகளில் செல்லும் இந்திய இளைஞர்களை சீர்படுத்தினால்தான் நமது சமுதாயத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்” என்று காஜாங் சிறைச்சாலை தலைமையக அரங்கில் நடைபெற்ற மலேசிய சிறைச்சாலை துறை துணை ஆணையர் அண்ணாதுரை காளிமுத்துவின் ” தனி ஒருவன் நினைத்துவிட்டால்” நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.
“சிறைவாசிகளுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக சமுதாயத்திடம் ஒப்படைக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாதுரை. சிறைவாசிகளின் அனுபவங்களை புத்தகமாக வெளியீட்டு அது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்துள்ளார். இது ஓர் உன்னத முயற்சியாகும்” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாராட்டினார்.
இது ஒரு சாதாரண நூல் வெளியீட்டு விழா கிடையாது. இதில் சமுதாய பிரச்னை அடங்கியுள்ளது. இளைஞர்கள் வழி தவறிப் போவதற்குப் பின்னணியில் அமைந்த காரணங்கள் யாவை என்பது குறித்து நம்மை சிந்திக்க வைக்கும் நூல் இது.
மஇகா இளைஞர் பிரிவு தலைவராகத் தான் பொறுப்பேற்றிருந்த காலத்தில் குண்டர் கும்பல், போதைப் பொருள் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் 2003 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பணிப்படையும் இதில் அடங்கும் என்றும் அவர் சொன்னார்.
இடையில் நிறுத்தப்பட்டு கடந்தாண்டு மீண்டும் செயல் வடிவம் கண்ட இப்படையில் தற்போது 15,000 பேர் இடம் பெற்றிருப்பதாகவும் தவறான சிந்தனை போக்குடைய இளைஞர்களை தலைமைத்துவ பொறுப்புகளை வகிக்கும் நிலைக்கு உயர்த்தி சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இத்தகைய படையை மஇகா அமைத்திருப்பதன் நோக்கம் என்றார்.
அதே சமயம், கல்வி ஒன்றினால் மட்டுமே நமது சமுதாயத்தின் சிந்தனையையும், வாழ்க்கைத் தரத்தையும் மாற்ற முடியும். இதற்காக ஜாதி, கட்சி எனும் பேதம் பார்க்காமல் இந்திய மாணவர்களுக்கு எம்.ஐ.இ.டி மூலம் உபகாரச் சம்பளம் மற்றும் கல்வி கடனுதவி வழங்கி வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
” தனி ஒருவன் நினைத்துவிட்டால்” நூல் அச்சடிப்பு செலவு தொகையை (47,000 வெள்ளி) ஏற்றுக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் , அண்ணாதுரை காளிமுத்துவின் தலைமையில் செயல்படவிருக்கும் சிறைவாசிகளின் மறுவாழ்வு மையத்திற்காக எம்.ஐ.இ.டி வாயிலாக 1 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பார்த்திபன், ஜமுனா வேலாயுதம் இருவரும் நிகழ்ச்சி நெறியாளர்களாகச் செயல்பட்டு இணைப் பேராசிரியர் டாக்டர் முகமட் ரஹீம் கமாலுடின் @ ரஹீம் முன்னா நூலாய்வு செய்த இந்நிகழ்ச்சியில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ டி. மோகன், டத்தோ எம்.அசோஜன், கல்வி குழு தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், முன்னாள் சிறை துணை ஆணையர் டாக்டர் கெளசல்யா தேவி சாது, மலேசிய வேதாத்திரி ஸ்கை மனவளக் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் இணைப் பேராசிரியர் அருள்நிதி ஆறுமுகம் பாலகிருஷ்ணன், டாக்டர் சண்முக சிவா, டைமன்சன் பதிப்பக உரிமையாளர் கேசவன், பல்வேறு துறைகள் மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
