Site icon அநேகன்

பெண்களை இழிவு படுத்திய சனாதனத்தை ஆதரிப்பதா? துணையமைச்சர் சரசுவதிக்கு எதிராக மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் கண்டனம்!

கோலாலம்பூர், அக்.22-

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியது; மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை அழித்து ஒழித்தே தீர வேண்டும். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா, சாதி ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என்று கூறினார்.

அதனை திரித்து, எவனோ ஒரு கோணங்கி, உதயநிதி இந்து மதத்தை அழிக்கப் போவதாகப் பேசிவிட்டார் என்று தமிழ்நாட்டில் கொக்கரித்ததை மலேசியாவில் மக்கள் நீதி கட்சியின் சரசுவதி கந்தசாமி தேவையில்லாமல் மூக்கை நுழைத்து முட்டுக்கொடுத்தது கண்டனத்திற்குரியச் செயலாகும்.

சனாதனம் என்றால் நிலையானது; மாற்றக்கூடாதது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? அதில் ஒருசிலவற்றை இங்கு பதிவிடுகின்றேன் காண்க.

  1. சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே என்று சொல்லி, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைத்ததே அது சனாதனம்.
  2. கணவன் இறந்த பெண்களை: சதீ என்று சொல்லி; மனைவியை, கணவனின் உடலோடு கட்டி, உயிரோடு கொழுத்தியதே அது சனாதனம்.
  3. படிப்பு எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) மட்டும்தான் வரும்; உங்களுக்கு வராது என்று தடுத்ததே அது சனாதனம்.
  4. விதவையானப் பெண்களை (கைம்பெண்) மொட்டையடித்து, வெள்ளைச் சேலை கட்டவைச்சு ஒரு மூலையில் உட்கார வைத்ததே அது சனாதனம்.
  5. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தரக்கூடாது என்று சொன்னதே அது சனாதனம்.
  6. பன்றி நடக்கலாம், நாய் நடக்கலாம்; ஆனால், குறிப்பிட்ட இந்து மக்களை மட்டும் தெருவில் நடக்கக்கூடாது என்று சொன்னதே அது சனாதனம்.
  7. ஒரு காலகட்டத்தில்; ஒரு குறிப்பிட்ட இந்துமத மக்கள் கூட்டத்தையே காலில் செருப்பு போடக்கூடாது என்று சொன்னதே அது சனாதனம்.
  8. நீ சூத்திரன் என்று சொல்லி; அவர்கள் தொட்டப் பொருளை தண்ணீர் தெளித்து, பின்னர் எடுப்பார்களே..! அது சனாதனம்.
  9. குலக்கல்வி; (சாதித்தொழில்) அவர் அவர் சாதித்தொழிலை மட்டுமே அவர்கள் செய்யவேண்டும் என்றது சனாதனம்.
  10. கோயில்களில் நமது பெண்களை தேவதாசிகளாக: பொட்டுக்கட்டி விட்டதே அது சனாதனம்.
  11. கோயில்களில் தமிழில் அர்ச்சனை கூடாது; தமிழ் நீஷ மொழி என்கிறதே அது சனாதனம்.
  12. நம்ம பாட்டியோடப் பாட்டி; ரவிக்கை அணிய உரிமை இல்லை; அப்படி அணிய வேண்டுமானால், முலை அளவைப் பொறுத்து; அதற்கு முலைவரி கேட்டதே அது சனாதனம்.

சனாதனம் என்ற ஒற்றைச்சொல்லை வைத்துக்கொண்டு: இதுபோல் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நமது மக்களுக்கு நடந்துள்ளன; அவற்றை கடந்த நூராண்டுகளுக்கு முன்பிருந்தே ‘பகுத்தறிவு பகலவன்’ அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பல போராட்டங்களுக்குப்பின் ஒழிக்கப்பட்டன.

என்றாலும், அவை இன்னும் ஆங்காங்கே சனாதனத்தை ஆதரிக்கும் பாஜக, இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் போன்ற பார்ப்பனிய அமைப்புகளின் வன்கொடுமையால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

திருமூலரின் சமயக் கொள்கையான ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பதை, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது அதனை சமயக் கொள்கையாக அறிவித்தார் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் வழிநடக்கும் திமுகவின் இன்றைய தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் முயற்சிக்கு சனாதனத்தின் மூலம் பிராமணர்கள் எதிர்க்கின்றனர்.


ஆனாலும், அந்த முயற்சி தொடர்கிறது. இதற்கிடையில், அனைத்து ஆலயங்களிலும் திருப்பணிகள், ஆலயங்களின் சொத்துக்களை மீட்டல், குடமுழுக்கு விழா என்றெல்லாம் சமய மறுமலர்ச்சிப் பணிகளை திமுக ஆற்றி வருகிறது. இந்து சமய வளர்ச்சிக்காகவே உருவான தனித்துறை, திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படுகிறது. அத்தகைய திமுகவைச்சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சமய வளர்ச்சிக்கோ இந்து சமய வழிபாட்டுக்கோ எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், தமிழர்களிடையே சாதிப் பிரிவினையை உருவாக்கி, அதன்மூலம் பிராமணர்கள் தாங்கள்தான் உயர்சாதியினர் என்பதை நிலைநிறுத்துவதற்காக கட்டமைத்த சனாதனக் கொள்கையைத்தான் எதிர்த்தார்.

இதற்காக, உதயநிதியை எதிர்க்கும் மலேசிய மக்கள் நீதி கட்சி, மலேசிய அரசாங்கத்திடம் – அமைச்சர் உதயநிதியின் கடப்பிதழை முடக்கச்சொல்வதும், அவர் நடித்த திரைப்படங்களையும் மலேசியாவில் முடக்கச்சொல்வதும் பிராமணர்களுக்கு ஆதரவாகவும்; ஒரு தமிழ் அமைச்சருக்கு எதிராகவும் செயல்படும் மலேசிய மக்கள் நீதி கட்சிக்கு, மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் நாக. பஞ்சு பெருங் கண்டனத்தைத் தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டில் மலேசியாவில், களியன் என்ற தமிழரின் உடல் உயர்சாதியினருக்கான இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதனால், அதைத் தோண்டியெடுத்து வேறு இடத்தில் புதைக்க நடந்த முயற்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றியும் கண்டது மலேசிய திராவிடர் கழகம். இந்த வரலாறு இன்றைய துணை அமைச்சர் சரசுவதி கந்தசாமிக்கு தெரியாமல் இருக்கலாம்.

மலேசியாவில், தோட்டப்புறங்களில் சாதிவாரியாக ‘லயங்கள்’ (தொடர்வீடுகள்) இருந்தனவே அதற்கெல்லாம் சனாதனம்தான் காரணம் என்பதை அறியாத மலேசிய மக்கள் நீதி கட்சியின் (PKR) அரை அமைச்சரான சரசுவதி கந்தசாமி இந்தியநாட்டு பிராமணர்களுக்கு வால்பிடிக்க முயல்வது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் நாக.பஞ்சு சுட்டிக் காட்டினார்.

Exit mobile version