கோலாலம்பூர் அக் 26-
மக்கள் நன்மை அடையும் வகையில் உண்மையான செய்திகளை வெளியிடும்படி ஊடகவியலாளர்களை மனிதவள அமைச்சர் சிவகுமார் ஊடகவியலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
பொய்ச் செய்திகளால் சமுதாயத்திற்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
ஆகையால், மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உண்மையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஜசெக ஏற்பாட்டில் தலைநகர் , லெபோ அம்பாங் பீட்டல் லீஃப் உணவகத்தில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடன் தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
” எனக்கும் ஜசெக கட்சி தலைவர்களுக்கும் தமிழ் ஊடகஙகள் அதிக அளவில் செய்திகளை வெளியிட்டு ஆதரவை வழங்கியுள்ளன. அதற்காக
இந்தத் தருணத்தில் தமிழ்ப் பத்திரிகைகள், மின்னியல் ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் “என்றார் அவர்.
“அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரை வெற்றி பெறச் செய்வதும் ஊடகம்தான். அவரை அரசியலில் வீழ்வுறச் செய்வதும் ஊடகம்தான் . ஊடகத்திற்கு அத்தகைய ஆற்றல் உள்ளது” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் தியோ நீ சிங், துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் இங், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், புக்கிட் கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ், பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன், இதர ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரோடு ஊடகவியலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
