Site icon அநேகன்

தெலுங்கு அறக்கட்டளையின் சேவை ஊக்கமளிக்கிறது! அமைச்சர் சிவகுமார் பாராட்டு

கோலாலம்பூர், நவ 20-
வசதியற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காக தீபாவளிக் கொண்டாட்டத்தில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் உன்னத பங்களிப்பு மனநிறைவை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

கோலாலம்பூர் டமான்சாரா காமன்வெல்த் கிளப்பில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செலாயாங் சுவீட் கேர் இல்லத்தைச் சேர்ந்த 16 குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றார் அமைச்சர்.

“இந்த நிகழ்வை வெற்றிகரமாகத் திட்டமிட்டதற்காக மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ஆர் .காந்தராவ்விற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் சிவகுமார்.

அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழாவை இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடுவது நிகழ்வுக்கு முக்கியத்துவம் சேர்க்கிறது.

மேலும் சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பைக் காண்பது அற்புதமாக இருக்கிறது.

ஒரு பள்ளி மாணவிக்கும் நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டதை பெரிதும் வரவேற்கிறேன்.

மலேசிய தெலுங்கு அறக்கட்டளை சிரமப்படும் மக்களுக்கு நீண்டகாலமாக அர்ப்பணிப்பு உணர்வுடன் உதவி வருகிறது என்பது உண்மையிலேயே வரவேற்கக்கூடியது என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம் பாராமல் அறக்கட்டளை பேருதவிகளைப் புரிந்துள்ளது.

“அதற்காக இந்த வேளையில் தலைவர் டத்தோ ஆர் காந்தா ராவ் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவிற்குப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

மக்களுக்கு சேவை செய்வதில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என்றார்.

“மேலும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றி வரும் மதிப்புமிக்க பங்களிப்புகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version