Site icon அநேகன்

குடிநீர் பிரச்சனை: லங்காவி மக்களுடன் ஸ்பான் சந்திப்பு

குடிநீர் பிரச்சனை:
லங்காவி மக்களுடன் ஸ்பான் சந்திப்பு

சைபர்ஜெயா, நவ.29-
தண்ணீர் விநியோகப் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட லங்காவி, சுங்கை ராயா தோட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

“இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் 350 குடியிருப்பு பகுதிகள் அடங்கிய தாமான் சுங்கை ராயா, கம்போங் பெலாங்கா பெச்சா, கம்போங் தெலுக், கம்போங் கிசாப் ஆகிய 4 பகுதிகளின் பிரதிநிதிகள் வாயிலாக தண்ணீர் விநியோகப் பிரச்சனையைச் செவிமடுப்பதாகும்”.

இச்சந்திப்பில் ஸ்பான் ஊழியர்கள் உட்பட டாருல் அமான் தண்ணீர் நிறுவனத்தின் (சாடா) பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் 30 பேர் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் குறுகிய, நடுத்தர நீண்ட கால தீர்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டன. அவற்றில்:-

சாடாவின் குறுகிய கால அணுகுமுறைகள்:
அ. தண்ணீர் தொட்டி லோரிகளின் எண்ணிக்கையை 4லிருந்து 7ஆக அதிகரித்தல்
ஆ. வியூகபூர்வ இடங்களில் உள்ள நீர்த்தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும்
இ. தண்ணீர் கையிருப்பை அனுப்புவதற்கும் அதற்கான அட்டவணையைத் தயார் செய்வதற்கும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் ஊழியர்களைத் தயார்படுத்தி வைத்தல்

நடுத்தர கால அணுகுமுறைகள்:
அ. உறிஞ்சித் தொட்டியுடன் 3 பம்ப் நிலையங்களை தாமான் டெலிமா, தாமான் சுங்கை ராயா, கம்போங் கிசாப் ஆகிய பகுதிகளில் சாடா அமைக்கும்
ஆ. இயற்கை வள, சுற்றுச்சூழல் நீர் துறை அமைச்சின் ஒதுக்கீட்டில் கடலுக்கு அடியில் குழாய் பழுதுபார்க்கும் திட்டத்தை சாடா மேற்கொள்ளும். இத்திட்டம் தற்போது சீரமைப்புப் பணிகளுக்கானப் பரிந்துரை தொடர்பில் ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் நிலையில் உள்ளது.

நீண்ட கால திட்டம்:
நாளுக்கு 5 கோடி லிட்டர் தண்ணீர் கையிருப்பை அதிகரிக்க பாடாங் சாகா 4 மற்றும் 5இல் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை நிர்மாணிக்கப்படும். இதை பி.ஏ.ஏ.பி நிறுவனம் மேற்கொள்ளும். இத்திட்டம் வரும் 2028ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version