புத்ரா ஜெயா, டிச 8-
மடானி அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்கி வரும் இந்திய சமுதாயத்திற்கு பெருமையை சேர்க்கும் வகையில் அரசு துறைகளில் இவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று இமயம் என்றழைக்கப்படும் புத்ரா ஜெயா இந்திய அரசு பணியாளர்கள் சங்கம் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
இன்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை நேரில் சந்தித்து இமயம் பேச்சுவார்த்தையை நடத்தியது.
இந்தச் சந்திப்பில் இமயத்தின் துணைத் தலைவர் சரவணன் குமார் தலைமையில், பூவன் ஆறுமுகம், டாக்டர் திலகவதி, முருகன் நடராஜன், உமாதேவி நடராஜன், தியாகராஜன் கண்ணன், இளம்பரிதி மாணிக்கம், ராஜேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியர்களை அரசுப் பணியில் சேர்ப்பது குறைந்து வருகிறது.போலீஸ் மற்றும் ராணுவத்தை சேர்க்காமல் கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை 41,117 பேர் (4.11 %) மட்டுமே உள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் .அதோடு, இந்திய அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சரவணன் வலியுறுத்தினார்.
மேலும் புத்ரா ஜெயா இந்திய அரசு பணியாளர்கள் சங்கம் தீபாவளி, பொங்கல் போன்ற விழாவை நடத்துவதற்கு மானியம் வழங்கப்பட வேண்டும்.
நாங்கள் கொள்கை வகுப்பாளர்களாக இருப்பதால், அரசாங்கத்திற்கான இந்திய தொடர்பான எந்தவொரு விஷயத்திற்கும் இமயம் ஓர் ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இமயம் முன் வைத்த கோரிக்கைகளை முழுகவனத்தில் எடுத்துக் கொள்வதாக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
