கோலாலம்பூர், டிச.8-
தற்போதைய உலகளாவிய பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வு காணும் ஓர் அணுகுமுறையாக தண்ணீர் துறையை முறைப்படுத்த வரும் 3 ஆண்டுகளில் 30 பில்லியன் வெள்ளியை மலேசிய அரசு முதலீடு செய்ய வேண்டும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
தண்ணீரும் எரிசக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, காரணம் புதிய எரிசக்தியை மேம்படுத்துவதற்கு தண்ணீர் வளம் மிகவும் முக்கியமாகும். உதாரணத்திற்கு நீர்மின்சார உற்பத்திக்குத் தண்ணீ மிக அவசியமாகும் என்றார்.
இப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கருதப்படுவது போதுமான அளவு தண்ணீர் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி குடிநீர் மற்றும் கழிவுநீர் பயன்பாடு சுத்திகரிப்பில் கார்பன் நடுநிலை தன்மையை உருவாக்க வேண்டும்.
” இதில் மிகவும் வருத்தமளிப்பது துபாயில் நான் கலந்து கொண்ட 28ஆவது உச்சநிலை மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் தண்ணீர் நிர்வாகப் பங்களிப்பில் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகும்” என்று அறிக்கை ஒன்றின் வழி சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை கடந்த 6ஆம் தேதி துபாயில் நடைபெற்ற மாநாட்டில் இடம் பெற்ற உரையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
நாம் பருவநிலை நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறோம். ஆகையால், தண்ணீரை தேசிய பாதுகாப்பில் ஒரு பகுதியாக நாம் கருத வேண்டும் என்றார்.
வரும் 2030-2050 கால கட்டத்தில் மலேசியா வறட்சியை எதிர்நோக்கும் என்று தேசிய தண்ணீர் ஆராய்ச்சி கழகம் கூறியுள்ளது.இது ஓர் ஆபத்தான அறிகுறியாகும். காரணம் தண்ணீர் பற்றாக்குறை வர்த்தகங்களை மிகவும் பாதிக்கும் என்பதை சார்லஸ் சுட்டிக் காட்டினார்.
