கோலாலம்பூர், டிச.22-
2024 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில், ஸ்தாப்பாக் மற்றும் வங்சா மாஜு மக்களுக்கு நாள்காட்டிகளை விநியோகித்தது மட்டுமின்றி அவர்களின் மனக்குமுறல்களையும் கேட்டறிந்தார் வங்சா மாஜு தொகுதி பி.கே.ஆர். தலைவர் என்றி லாய் சென் ஹெங்.
“ஒவ்வொரு முறையும் புத்தாண்டுக்கான நாள்காட்டிகளை வழங்கும் நடவடிக்கை டிசம்பர் மாதத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும். இதில் என்னைப் பொறுத்தவரை இதை மக்களுடன் ஒரு தொகுதித் தலைவரை இணைக்கும் ஒரு நடவடிக்கையாக நான் கருதுகிறேன்’’ என்றார்.
“அது மட்டுமின்றி, இத்தொகுதி மக்கள் தற்போது எதிர்நோக்கும் அடிப்படைக் கட்டமைப்பு, வசதிகள் உட்பட அனைத்து விவகாரங்களையும் நான் பதிவு செய்து விட்டேன்”.
“இதில் ஒருசில பிரச்சனைகள் அதாவது வாகன நிறுத்துமிடம், குப்பைகள் சேகரிப்பு, தெரு நாய்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு கண்டு ஒவ்வொரு பகுதியும் முறையாகப் பராமரிக்கப்படுவதை நான் உறுதி செய்வேன்” என்று அவர் மேலும் சொன்னார்.
சமூகத்தினரை நேரில் சென்று சந்திப்பது என்பது தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மட்டுமின்றி தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி புதிய கூட்டரசு பிரதேச அமைச்சராக டாக்டர் ஸாலேஹா முஸ்தாபாவை நியமித்தது இன்னும் குறுகிய காலத்தில் கொண்டாடப்படவிருக்கும் புத்தாண்டுக்கான பரிசாகக் கருதப்படுகிறது என்று என்றீ லாய் குறிப்பிட்டார்.
