புத்ராஜெயா, ஜன.26-
தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த டிஜிட்டல் சுகாதார உருமாற்றத்தின் மூலம் ஒவ்வொருவரும் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்துவ பதிவை மட்டுமே கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
ஒரு நபருக்கு ஒரு மருத்துவ பதிவு மட்டுமே இருப்பதன் மூலம் அனைத்து நிலைகளிலும் சுகாதார வசதிகளின் ஆற்றலை இன்னும் மேம்படுத்த முடியும்.
மலேசியாவின் சுகாதார பராமரிப்பு சூழலை இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் வலுப்படுத்திய பின்னர் இந்தப் பலன்தான் நமக்குக் கிடைக்கும். மின்னியல் மருத்துவ பதிவு (இ.எம்.ஆர்.) அல்லது வாழ்நாள் சுகாதார பதிவை (எல்.எச்.ஆர்.) வலுப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுகாதார பதிவுகள் இணைக்கப்படுவதை நாம் காணலாம் என்று புத்தாண்டை முன்னிட்டு அமைச்சின் அலுவலகத்தில் உரையாற்றிய போது கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.
-பெர்னாமா

