Site icon அநேகன்

எஸ்.எம்.சி புரட்சி திட்டம் 50,000 மாணவர்களைச் சென்றடையும்! -சுரேன் கந்தா திட்டவட்டம்

பெட்டாலிங் ஜெயா, ஜன.28-

நாடளாவிய நிலையில் 127 இடங்களில் கல்வி புரட்சி திட்டத்தை மேற்கொள்வதன் வாயிலாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் (எஸ்எம்சி) இவ்வாண்டு 50,000 மாணவர்களைக் கொண்டிருக்கும் என்று இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா திட்டவட்டமாகக் கூறினார்.

நாடு முழுமையும் இனி எஸ்எம்சி நிலையங்கள் செயல்படவிருக்கின்றன. குறிப்பாக, தலைநகர், பிரிக்பீஃல்ட்ஸ் நிலையம் மீண்டும் செயல்படவிருக்கிறது. இதன் பதிவு வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெறும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கல்வி வழிகாட்டியோடு தன்முனைப்பு, புரட்சி, தன்னாளுமை வளர்ச்சி முகாம் மற்றும் தலைமைத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழி இந்திய மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று இங்குள்ள எஸ்எம்சி தலைமையகத்தில் நடைபெற்ற ‘முன்னேற்றம் நம் உரிமை’ எனும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 17 & 18 ஆம் தேதிகளில் தேசிய நிலையிலான எஸ்.டி.பி.எம். கருத்தரங்கு நடைபெறும் என்றும் அவர் சொன்னார்.

“நான் ஓர் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நமது சமூகம் நமக்கு ஆன்மீகம், அறிவியலோடு நாகரீகத்தையும் கற்றுத் தந்துள்ளது” என்றார்.

இந்தியர்கள் தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து ‘வெற்றி பெற்ற உலக பிரஜைகளாக’ மாற வேண்டும். தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நாம் வாழ நமக்கு கல்வி அவசியம் என்று சுரேன் வலியுறுத்தினார்.

2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் மற்றும் இலக்கு குறித்த விளக்கக் கூட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போது யூ.பி.எஸ்.ஆர் மற்றும் பி.டி.3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் கல்வியில் மாணவர்களின் அடைவு நிலை கவலை அளிப்பதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன. இவர்களின் குறைகளைக் களையும் வகையில் ஆறாம் ஆண்டு, மூன்றாம் படிவம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான வார இறுதி வகுப்புகள் வரும் மார்ச் மாதம் தொடங்கி பினாங்கு முதல் ஜொகூர் வரை மீண்டும் தொடங்கப்படும் என்று நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய எஸ்எம்சி இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம்.தம்பிராஜா குறிப்பிட்டார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த ‘முன்னேற்றம் நம் உரிமை’ எனும் இந்நிகழ்ச்சியில் மஇகா உதவி தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, டத்தோ புரவியப்பன், டத்தோ பீ.காசி, போலந்துக்கான மலேசிய தூதர் டத்தோ சித்ரா தேவி, பேராசிரியர் கே.எஸ்.நாதன், டாக்டர் தேவிகா, பேராசிரியர் சிவச் சந்திரலிங்கம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version