கோலாலம்பூர், பிப்.5-
உலகிலுள்ள 106 நாடுகளை மோட்டார் சைக்கிளில் வலம் வருவதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமது பயணத்தைத் தொடங்கிய மலேசியரான கதிரவன் சுப்பராயன், (வயது 63) தற்போது 32 நாடுகளில் வெற்றிகரமாக தடம் பதித்து விட்டார்.
பரமேஸ்வரா என்று பலரால் அழைக்கப்படும் மலாக்காவைச் சேர்ந்த முன்னாள் மின் மற்றும் பராமரிப்பு மேலாளரின் இந்த சாகசத்தின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்து உலகிற்கு மலேசியாவைப் பிரபலப்படுத்துவதாகும்.
இத்துறையில் 39 ஆண்டுகால அனுபவங்களோடு உயர் மின்னழுத்த திறன்பயிற்சி சான்றிதழைக் கொண்டிருக்கும் கதிரவனுக்கு இதற்கு முன் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்திடமிருந்து சலுகை கிடைத்தது. இருப்பினும் தாம் இதுநாள் வரை தேக்கி வைத்திருந்த கனவை நோக்கிப் புறப்பட வேண்டும் என்பதற்காக அதை நிராகரித்து விட்டார்.
உலக வெப்பம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்து மலேசியாவின் இயற்கை அழகைப் பிரபலப்படுத்தும் உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இவரை உலகம் வலம் வந்து மலேசியாவின் இயற்கையைப் புகழ்பெறச் செய்ய ஊக்குவித்துள்ளது.
-பெர்னாமா
