கோலாலம்பூர், பிப்.28-
இசைஞானி இளையராஜாவின் பாடல்களைக் கொண்டு தலைநகரில் தனது முதலாவது இன்னிசை நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறது தமிழ் மெல்லிசை சங்கம்.
வரும் மார்ச் 2 ஆம் தேதி இரவு மணி 8.00க்கு தலைநகர், டான்ஸ்ரீ சோமா அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் தன்னுடன் சேர்த்து பிரபல உள்ளுர் பாடகர்கள் எண்மர் ரசிகர்களை மகிழ்விப்பர் என்று இந்நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தலைவர் கிறிஸ்ட் சின்னப்பன் தெரிவித்தார்.
” ரசிகர்களின் மனதைக் கவரும் வகையில் இசைஞானியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 35 பாடல்கள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருக்கும். நாட்டின் சிறந்த பாடகர்கள் வழங்கும் ஓர் அருமையான இன்னிசை நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கும் ” என்று இந்நிகழ்ச்சி தொடர்பாக இங்குள்ள சோமா அரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.
” தமிழ் மெல்லிசை சங்கம் கடந்த ஜனவரி 18ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. ‘நீ பாதி நான் பாதி ‘ சங்கம் படைக்கும் முதலாவது இசை நிகழ்ச்சி என்பதால் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் அறிமுக விழாவும் நடைபெறும்” என்று கிறிஸ்ட் மேலும் சொன்னார்.
இந்நிகழ்ச்சி அறப்பணி நோக்கத்தையும் கொண்டுள்ளது. அவ்வகையில் மார்ச் மாதம் புதிய பள்ளித் தவணையையொட்டி கோல சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு புத்தகப் பைகள் மற்றும் உபகரணங்கள் போன்றவை இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுற்று வட்டார மக்கள் திரளாகக் கலந்து கொள்ளும் பொருட்டு 20 வெள்ளி என மிகக் குறைந்த விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கிறிஸ்ட் ரசிகர்களுக்கு மனநிறைவைத் தரும் ஓர் இன்னிசை நிகழ்ச்சியாக இது நிச்சயம் அமைந்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேல் விவரங்களுக்கு கிறிஸ்ட் 016-2816918 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
