பத்துகேவ்ஸ், பிப்.29-
பிள்ளையார் அருளிசை இயக்கத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள பண்டார் பாரு செலாயாங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டரசு பிரதேச மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்துடன் இணைந்து இவ்வியக்கம் நடத்திய இப்பொங்கல் நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினருமான ஹம்சா ஹாரிஸ் சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கும் போட்டி, கோலம் போடும் போட்டி, சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, உரி அடித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
வர்ணம் தீட்டும் போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கோலம் போடும் போட்டி, பொங்கல் வைக்கும் போட்டி ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டன.
இச்சங்கத்தின் துணைத் தலைவரும் ஏற்பாட்டுக் குழு தலைவருமான சோலைமன்னன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சங்கத் தலைவர் பொன்.மருதன், செயலாளர் ஏ.மார்த்தாண்டன், மகளிர் பிரிவு தலைவி டாக்டர் கே.பரிமளா, பணிப் பிரிவு செயலாளர் துர்க்காம்பிகை, சங்கத்தின் ஆலோசகர் டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன், செலாயாங் நகராண்மைக் கழகத்தின் 20ஆவது வட்டார உறுப்பினர் தனபாலன், காசே சூரியா சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
