கிள்ளான், மார்ச் 10-
உலக மகளிர் தினத்தையொட்டி தேசிய மைபிபிபி மகளிர் பிரிவு இங்குள்ள சமூகநல இல்லத்தில் மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது.
இசை நாற்காலி, ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனிச்சல் வெட்டி இந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுடன் மைபிபிபி மகளிர் பிரிவு தலைவி புனிதா முனுசாமி தலைமையில் இந்தக் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. .
இந்நிகழ்ச்சிக்கு மைபிபிபி தேசிய உதவி தலைவரும் சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவருமான டத்தோ மோகன் கந்தசாமி சிறப்பு வருகை புரிந்தார். இவருடன் சிலாங்கூர் மாநில உதவி தலைவர் டாக்டர் சுரேந்திரன், தேசிய தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், துணைத் தலைவர் குமார், நந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவிட் காலத்தில் தடைபட்ட மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியை இவ்வாண்டு மீண்டும் தாங்கள் தொடர்வதாகவும் புனிதா தெரிவித்தார்.
பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவர்களின் சேவை, அர்ப்பணிப்பு, தியாகங்கள் போற்றப்பட வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு இந்த இல்லத்தில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் மைபிபிபி மகளிர் பிரிவு பெருமை கொள்வதாக அவர் கூறினார்.
இந்த இல்லத்தில் 16 முதல் 67 வயது வரையிலானோர் தங்கியிருப்பதாகவும் இவர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகளையும் தாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ரோஸ் பீரு சமூக இல்ல பொறுப்பாளர்களான மரியம்மா மற்றும் பிரவினா இருவரும் தெரிவித்தனர் .
