கிளானா ஜெயா, மார்ச் 11-
ஒரு மனிதர் மக்கள் மனதில் எந்த அளவு இடம் பிடித்துள்ளார் என்பது அவரது மறைவுக்குப் பின்னர் மக்கள் அவர் மீது கொண்டிருந்த மதிப்பு வழி தெரிய வரும் என்று ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
முன்பெல்லாம் ஒரு சிறுவன் நல்லவனா கெட்டவனா என்பது அவனது பெற்றோர்களை வைத்துக் கூறலாம். இப்போது அவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் சார்ந்திருக்கும் நண்பர்களை வைத்துக் கணிக்கலாம்.
இதையெல்லாம் தாண்டி இப்போது டிக் டாக்கில் வெளியிடும் செய்தி அடிப்படையில் ஒருவனின் குணத்தை விவரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இங்கு மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் மஇகா முன்னாள் தேசிய தலைவர் அமரர் துன் ச.சாமிவேலு அவர்களின் 88ஆவது பிறந்தநாளையொட்டி அவரின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
பொதுச்சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் அரசாங்க பதவியில் இல்லாத போதும் கூட அவர் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து வைத்திருந்தார்கள் என்றால் அது நினைவில் வாழும் துன் சாமிவேலு அவர்களையே சாரும். மறைந்த பின்னர் அவருக்காக நடத்தப்படும் கூட்டத்திற்கு நாடளாவிய நிலையில் இருந்து மக்கள் திரண்டு வந்திருப்பது இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும் என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.
இவர் மக்களுக்கு எந்த அளவு சேவையாற்றியுள்ளார் என்பதை இவரின் பிறந்த நாளில் இவருக்கு மரியாதை செலுத்துவதற்காகத் திரண்ட மக்கள் கூட்டம் காட்டுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா துன் சாமிவேலுவுடன் தாம் கழித்த இனிய நாட்களை நினைவு கூர்ந்தார். தமது வாழ்வின் மேன்மைக்கு வித்திட்டவர் துன் சாமிவேலு என்று புகழுரைத்தார்.
முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ எஸ்.கே. தேவமணி, டத்தோ வி.எம்.பஞ்சமூர்த்தி, டத்தோ டி.மோகன், ஆசிரியர் மாணிக்கம் ஆகியோரும் துன் சாமிவேலு அவர்களுடன் தாங்கள் கழித்த இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மனம் நெகிழச் செய்தது.
நாடு முழுமையும் இருந்து மஇகா உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள், தொகுதி தலைவர்கள், மாநில தலைவர்கள் மத்திய செயலவை உறுப்பினர்கள் , முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள், பிரமுகர்கள் என திரளானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
