Site icon அநேகன்

கெவின் மொராய்ஸ் கொலை வழக்கு: 6 ஆடவர்களுக்கான தூக்கு தண்டனை நிலைநிறுத்தம்!

கோலாலம்பூர், மார்ச் 14-

9 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தரப்பு துணை வழக்கறிஞரான டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸைக் கொலை செய்ததற்காக 6 ஆடவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

முன்னாள் நோயியல் நிபுரணான கர்னல் டாக்டர் ஆர்.குணசேகரன் (61), கடன் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ரவிச்சந்திரன் (53) மற்றும் வேலையில்லாத நால்வரான ஆர்.தினேஸ்வரன் (32), ஏ.கே.தினேஷ் குமார் (31), எம்.விஸ்வநாத் (34) மற்றும் எஸ்.நிமலன் (31) ஆகியோரே மரண தண்டனையை எதிர்நோக்கியவர்கள்.

டத்தோ ஹாடாரியா சையிட் இஸ்மாயில் தலைமையில் டத்தோ அகமட் ஸைடி இப்ராஹிம் மற்றும் டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இத்தீர்ப்பை அளித்தது.

இவ்வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மற்றும் விளக்கங்களை ஆராய்ந்த பின்னர் உயர் நீதிமன்றம் சட்டம் மற்றும் தகவல்களிலிருந்து எந்தவொரு தவறும் புரியவில்லை என்பது தெரிய வந்ததாக அடாரியா குறிப்பிட்டார்.

இந்த ஆடவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை சரியானதே என்று நாங்கள் கருதுகிறோம் என்றார் அவர்.

“இந்த கொலைச் சம்பவம் முறையாகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்பதும் மரணமடைந்தவரின் நிலையைப் பார்க்கும் போது இவர்கள் புரிந்த கொடூரத்தைக் காண முடிந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

அவரைக் கொலை செய்தது மட்டுமின்றி அவரின் காரை எரித்து அவரின் பொருட்களைத் தூக்கி எறிந்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல. ஆகையால் இவர்கள் புரிந்த குற்றத்திற்கு ஏற்ப இவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனையை இந்த நீதிமன்றம் வழங்குகிறது.

இவர்கள் செய்த மேல் முறையீட்டு விண்ணப்பம் நிராகரிகப்படுவதோடு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இதன் வழி நிலைநிறுத்தப்படும்.      

கடந்த 2020 ஜூலை 10ஆம் தேதி கெவின் மொராய்சைக் கொலை செய்ததாக உயர் நீதிமன்றம் இவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்தது.  

கடந்த 2015 செப்டம்பர் 4ஆம் தேதி இரவு மணி 7.00க்கும் 8.00க்குமிடையே ஜாலான் யூ.எஸ்.ஜே.1/6டி, சுபாங் ஜெயா ஜாலான் டூத்தாமாஸ் ராயா, செந்தூலில் 55 வயதுடைய கெவின் மொராய்சைக் கொலை செய்ததாக இவர்கள் அனைவர் மீதும் குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டது.

இதே நாளில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட கெவின் மொராய்ஸ் ஆகக் கடைசியாக கோலாலம்பூர் மெனாரா டூத்தாவிலுள்ள தனது ஆடம்பர அடுக்குமாடி வீட்டிலிருந்து புரோட்டோன் பெர்டானா கார் வழி புத்ராஜெயாவிலுள்ள தனது சட்டத்துறை அலுவலகத்தை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இவரின் உடல் அதே ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி சுபாங் ஜெயா, சுபாங் மேவாவிலுள்ள ஒரு சாலையில் சிமெண்டால் மூடப்பட்டு ஒரு தோம்பில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.     

Exit mobile version