Site icon அநேகன்

இந்திய சமூகத்திற்கு புதிய வரைவு திட்டமா? -டத்தோ லோக பாலா அதிருப்தி

கோலாலம்பூர், மார்ச் 19-

நாட்டிலுள்ள இந்தியர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய வரைவு திட்டம் அமைப்பது அவசியமற்ற ஒன்று என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா திட்டவட்டமாகக் கூறினார்.

இச்சாராரின் நலனுக்காக மஇகா முன்னாள் தேசியத் தலைவர் அமரர் துன் டாக்டர் சாமிவேலு கடந்த 2008ஆம் ஆண்டு சமூக பிரச்சினைகள் மீது பிரத்தியேக ஆய்வுக்கு பணித்ததை லோக பாலா சுட்டிக் காட்டினார்.

அந்த ஆய்வு தேசிய முன்னணி அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மறு ஆண்டான 2009 இல் அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நிர்வாகத்தின் கீழ் இந்தியர்களின் சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ‘ புளூபிரிண்ட்’ என்று சொல்லப்படும் விரிவான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனை மேற்பார்வையிட அமைச்சரவைக் குழுவின் தலைவராக அப்போதைய சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார்.

இதில் அனைத்து இந்திய அமைச்சரவை உறுப்பினர்கள், இந்திய அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டூழிய நிறுவனங்களும் இடம்பெற்றன.

கல்வி தொடங்கி இந்தியர்களின் அனைத்து சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஆவணம் மலேசிய இந்திய புளூபிரிண்ட் ஆகும்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் இந்த புளூபிரிண்டில் கல்வி, வீட்டுவசதி மற்றும் பொருளாதார அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஏற்கெனவே இருக்கும் ஆய்வு ஆவணம் போதுமானது என்பதால் புதிய வரைவு திட்டம் தேவையில்லாத ஒன்று என்று அறிக்கை ஒன்றின் வழி டாக்டர் லோகபாலா வலியுறுத்தினார்.

மலேசிய இந்திய சமூக மேம்பாட்டில் மேலும் தாமதத்தைத் தவிர்க்க, இத்திட்டத் தை உடனடியாக செயல்படுத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதே வேளையில், இந்த ஆய்வை அமல்படுத்த நாட்டின் மூத்த அரசியல் கட்சிகளான மஇகா மற்றும் மைபிபிபி மடானி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version