தெலுக் இந்தான், ஏப்.25-
மக்களிடையே ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக பேரா, பாகான் டத்தோ ஆரோக்கிய வாழ்க்கை முறை சங்கம் மாபெரும் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தது.
தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமியையொட்டி இந்த மருத்துவ முகாம் ஏப்ரல் 22, 23 ஆகிய இரு நாட்களில் இங்குள்ள மெனாரா சொண்டோங் தெலுக் இந்தானில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, வளர்சிதை மாற்றக் கோளாறு மீதான பரிசோதனை, இரத்த, சிறுநீர் பரிசோதனை மற்றும் ஆலோசனை, கண் பரிசோதனை போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பார்வை கோளாறு காரணமாக வாசிப்பதற்குச் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு உதவியாகக் கண் பரிசோதனைக்குப் பின்னர் 1,000 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஏற்பாட்டாளருக்கு நன்றி தெரிவித்தனர்.
தெலுக் இந்தான் மருத்துவமனை, உறுப்பு தான பிரிவுடன் இணைந்து இரத்த தான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பலர் இரத்த தானம் செய்ய முன்வந்தது பாராட்டுக்குரியதாக அமைந்தது.
இதனையடுத்து, மார்பக பரிசோதனைக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட 127 பெண்களுக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல கடிதங்கள் வழங்கப்பட்டன.
சுகாதார பிரச்சனையினால் நிதி நெருக்கடி எதிர்நோக்குபவர்களுக்குச் சுகாதார நிதி ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பக்தர்கள் உட்பட பொதுமக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது தொடக்கக் கட்டத்திலேயே பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆரோக்கிய வாழ்க்கை முறை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த மருத்துவ முகாமில் தெலுக் இந்தான் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இந்த மருத்துவ பரிசோதனை நோய்களைத் தொடக்கக் கட்டத்திலேயே அடையாளம் கண்டு ஆரம்பக் கட்ட சிகிச்சை மேற்கொண்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரியும் என்று இச்சங்கத்தின் தலைவர் டாக்டர் நரேந்திரன் குணசேகரன் தெரிவித்தார். இதில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டது தங்களின் உடல் ஆரோக்கியம் மீது இவர்கள் கொண்ட அக்கறையைக் காட்டுகிறது என்றார் அவர்.

