Site icon அநேகன்

கோல குபு பாரு இடைத்தேர்தல்: சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்வீர்! -டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வேண்டுகோள்

கோல குபு பாரு, ஏப்.26-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றக்கூடிய வேட்பாளரைத் தேர்வு செய்யும்படி இத்தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி இருவரும் மக்களுக்குச் செய்ய வேண்டிய தங்களின் கடமையைச் செவ்வனே ஆற்றி வருகிறார்கள் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சுட்டிக் காட்டினார்.

அரசாங்கம் வகுக்கும் சில திட்டங்கள் உடனடியாகச் செய்ய முடியாமல் போகலாம். அத்திட்டங்கள் நிறைவேறுவதற்குச் சில காலம் பிடிக்கலாம். இதற்காக அரசாங்கத்தைக் குறை கூற கூடாது. இந்த வட்டார மக்கள் தங்களுக்கு என்ன குறைகள் அல்லது பிரச்சனைகள் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட தலைவரை அணுகி உதவியை நாடலாம் என்றார் அவர்.

வரும் மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற தேர்தலில் தங்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றக்கூடிய உறுப்பினரைத் தேர்வு செய்யும்படி அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினரைப் போல் இத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளரும் மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர் என்பதால் இந்த தொகுதி வாக்காளர்கள் குறிப்பாக இந்தியர்கள் பக்காத்தான் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று இங்குள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு சமூகச் சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, பொறுப்பற்ற சில தரப்பினர் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதாகவும் திசைத் திருப்பி வருவதாகவும் உலு சிலாங்கூர் பி.கே.ஆர். நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.

இதுபோன்ற செயல் உண்மையில் அநாகரிகமான செயல் என்று அவர் சாடினார்.

தவறை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள், மாறாக நல்லவற்றை இவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். ஆகையால் இந்த இடைத்தேர்தலில் கோல குபு பாரு வாக்காளர்கள் சிந்தித்து சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version