புத்ராஜெயா, ஏப்.27-
தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கோல குபுபாரு இடைத்தேர்தலில் வாக்களிக்கும்படி இந்திய வாக்காளர்களை மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
வரும் மே 11ஆம் தேதி நடைபெறும் இத்தேர்தலில் இந்தியர்கள் விவேகமான முடிவை எடுப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நன்மையைத் தரும் என்றார் அவர்.
“கோல குபுபாரு வட்டாரத்தில் தீர்வு காணப்படாத நிலையில் சில விவகாரங்கள் இருப்பதை மஇகா அறிந்துள்ளது. இதனால் இத்தொகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர், ஆனால், இவர்கள் தங்களின் அதிருப்தியைக் காட்டும் தருணம் இது அல்ல” என்றார்.
மக்கள் குறிப்பாக இந்தியர்கள் நலன்களுக்காக அரசாங்கம் தற்போது பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. ஆகையால், தங்களின் எதிர்கால நலனுக்காக இத்தேர்தலில் இவர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இத்தேர்தலில் இந்தியர்கள் வழங்கும் ஆதரவு அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள இந்திய பிரதிநிதிகளுக்கு பல அனுகூலங்களை வழங்கும். மேலும் அதிகமான ஒதுக்கீடுகளை இந்தியர்களுக்காக இவர்களால் பெற்றுத் தர முடியும் என்று இங்குள்ள மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட எம்ஐஇடி காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
“கொடுத்த வாக்குறுதிகளை நடப்பு அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று இவர்கள் கருதினால் அடுத்த தேர்தலில் தங்களின் முடிவை இவர்கள் மாற்றிக் கொள்ளலாம்” என்றார்.
இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானதைத் தொடர்ந்து வரும் மே 11ஆம் தேதி இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.
ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சரின் பத்திரிகை செயலாளர் பாங் சொக் தாவ்வை வேட்பாளராக பக்காத்தான் நியமித்துள்ள வேளையில், உலு சிலாங்கூர் பெர்சத்து தொகுதியின் இடைக்கால தலைவர் கைருல் அஸாரி சாஉட் பெரிக்காத்தானின் வேட்பாளராகவும் ஹாஃபிஸா ஸைனுடின் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் வேட்பாளராகவும் களமிறங்குகின்றனர். இதில் ஞாவ் கே யின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

