Site icon அநேகன்

இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்தப் பாடுபடுவோம்! -டத்தின் மகேஸ்வரி வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப்.27-

இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்துவதற்காக துடிப்புமிக்க வர்த்தகர்களை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வார்த்தக தொழிலியல் சம்மேளனம் உருவாக்கி வருவதாக டத்தின் மகேஸ்வரி கூறினார்.

இந்த சம்மேளனத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தற்போது ஒரு நல்ல நிலையை அடைந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அளவுக்கு உயர்வதற்கு இவர்களும் அடிமட்டத்திலிருந்துதான் வந்திருக்கின்றனர். அவ்வகையில் இப்போது எங்கள் குழுவில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர் என்று நாளை நடைபெறவிருக்கும் சங்கத்தின் தேர்தலில் தனது பொருளாளர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போட்டியிடும் மகேஸ்வரி விவரித்தார்.

“இதுநாள் வரை நாங்கள் மேற்கொண்ட பணிகள் என்று சொல்லும்போது வெவ்வேறு துறைகளில் இருக்கும் வணிகர்களுக்கு உரிய பயிற்சிகள் மற்றும் வழிகாட்டிகளை வழங்கி அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியை செவ்வனே மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

“சிறுதொழில் வணிகர்கள் மேன்மை அடைய வேண்டும். ஒரு காலத்தில் அவர்களும் பெரிய தொழிலதிபர்களாக உருவாக வேண்டும். இதன் வழி நாட்டிலுள்ள அனைத்து இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் பிரதான லட்சியங்களில் ஒன்றாகும்”.

தொடர்ந்து, நிவாஸ் ராகவன் தலைமையில் வர்த்தகத்தில் காலடி பதித்துள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக பல ஆக்கப்பூர்வ திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

சவால்கள் நிறைந்த வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அவர்களின் கணவன்மார்கள் மற்றும் குடும்பத்தினர்தான் பக்கபலமாக இருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் அதிகமான பெண்கள் தவிக்கின்றனர். அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக இவர்களுக்குக் கைகொடுத்து வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வது எங்களின் தூரநோக்கு திட்டமாகும்.

இதில் முக்கியமானதாக மித்ரா திட்டத்தை நாங்கள் ஏற்று நடத்தினோம். இந்தியர்களின் பொருளாதாரம் ஏற்றம் காண வேண்டும். குறிப்பாக, சிறுதொழில் வர்த்தகர்கள் ஒருபடி மேலே உயர வேண்டும். அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே மித்ராவின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் இதுவரை 900 வர்த்தகர்களுக்கு நாங்கள் வழிகாட்டி உள்ளோம்.

தொடர்ந்து, சிறு வணிகர்களுக்கு மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்.) உரிமம், நகராண்மைக் கழக உரிமம் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்கும் போது அவர்கள் ஒரு படி முன்னேறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு வளர்ச்சியடையும் போதுதான் இந்திய சமூகத்தின் பொருளாதாரமும் உயர்வு காணும். வர்த்தகர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயரும். இதன் வழி வர்த்தகச் சம்மேளனமும் நல்ல வளர்ச்சி காணும்.

இப்போது இவர்கள் சிறு வர்த்தகர்களாக இருக்கலாம்; இன்னும் 10 ஆண்டுகளில் இவர்கள் நடுத்தர வர்த்தகர்களாகும் வாய்ப்புகள் உண்டு. அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இவர்கள் வெற்றிபெற்ற தொழில்முனைவர்களாகக்கூடும். நாம் இவ்வாறுதான் தூரநோக்குடன் சில விவகாரங்களைக் கையாள வேண்டும்.

“இத்தேர்தலில் நிவாஸ் தலைமையிலான எங்கள் அணி வெற்றி பெற்றால் எங்களின் இலட்சியப் பயணம் தொடரும் என்பது நிச்சயம்” என்றார் மகேஸ்வரி.

Exit mobile version