கோல குபு பாரு, ஏப்.30-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆரம்பக் கல்வி நிலையில் என்ன தேர்ச்சி பெற்றார், இடைநிலைப்பள்ளியில் என்ன தேர்ச்சி பெற்றார் என்பன போன்ற பயனற்ற கேள்விகளைக் கேட்பதை எதிர்கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற கேள்வியை விடுத்து அவர் சார்ந்த கட்சி தொகுதி மக்களுக்காக என்னென்ன திட்டங்களை வகுக்கப் போகிறது, அதன் இலக்கு என்ன, மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் யாவை என்பன போன்ற ஆக்கப்பூர்வ கேள்விகளைக் கேட்டால் அவை நன்மை அளிப்பதாக இருக்கும் என்று தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பாங் சோக் தாவ்வின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி குறித்துக் கேள்வி எழுப்பியது அவரின் முதிர்ச்சியற்றத்தன்மையையே காட்டுகிறது என்றார் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ.
வேட்பாளரின் கல்வி தகுதி பற்றியும் இன பிரச்சனை குறித்தும் பேசி மக்களிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை எதிர்கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று இங்கு ஜசெக ஏற்பாட்டிலான தமிழ் ஊடகவியலாளர்களுடனான மதிய உணவு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மற்ற இனங்களை மதிப்பது, மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பது உயர்ந்த பண்புகளாகும். இதுவே பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒற்றுமையை விதைக்க வல்லது என்றார்.
மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டங்களை வகுத்துள்ளது என்பதை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதே மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“நாங்கள் ஒருவேளை சில பிரச்சனைகளை கவனிக்கத் தவறியிருக்கலாம். இதனை எங்களிடம் எடுத்துரைத்தால் அதனை தீர்க்க வேண்டிய வழிகளை நாங்கள் கண்டறிவோம். ஆகையால் இத்தேர்தலில் இத்தொகுதி வாக்காளர்கள் தங்களின் பிரச்சனைகளைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முன்வைத்தால் அதற்குரிய தீர்வைக் காணலாம்” என்றார்.
இதன் பொருட்டு உண்மை நிலவரங்களை மக்களிடம் எடுத்துரைப்பது ஊடகங்களின் பணியாகும். அந்த வகையில் தமிழ் ஊடகங்களும் அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அளப்பரிய பங்காற்றும் என்று துணையமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணையமைச்சர் குலசேகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வீ.பாப்பாராய்டு மற்றும் இங் சீ ஹான், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் ஆகியோராடு பத்திரிகை, வானொலி-தொலைக்காட்சி மற்றும் மின்னியல் ஊடக துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

