Site icon அநேகன்

“எதிர்கால சவால்களைச் சந்திக்க தொழிலாளர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!” -டத்தோ ரமணனின் மே தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 1-

தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும் என்பதே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் தலையாய இலக்கு என்று ரமணன் தமது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நிறைய போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. தொழிலாளர்களின் நலனுக்கான கோரிக்கைகளை அவ்வப்போது தொழிற்சங்கங்களும் முன்வைத்திருக்கின்றன.

கால மாற்றங்களுக்கேற்ப தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.

அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களின் முன்னோடிகள், தொழிலாளர் நலன் காக்க நிறைய போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்து வந்திருக்கின்றனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நடப்புச் சூழ்நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கான சம்பள நடைமுறைகளைக் காலத்தேவைக்கேற்ப மேம்படுத்தவும் மடானி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உழைக்கும் வர்க்கத்தினரான தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ரமணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Exit mobile version