கோலாலம்பூர், ஜூலை.18 –
ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் விவகாரம் தொடர்பில் எந்த ஒரு குற்றச் செயலையும் தாம் மறைக்கவில்லை என தேசிய சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ முஹமட் அபெண்டி அலி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தம் மீது கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கையில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தேசிய சட்டத்துறைத் தலைவருக்கான அதிகாரத்துக்கு உட்பட்டு தாம் செயல்பட்டதாக அவர் கூறினார். இதில் எந்த ஒரு விசயத்தையும் மறைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என அபெண்டி கூறினார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால், அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான குற்றங்களை மறைத்ததற்காக, தேசிய சட்டத்துறைத் தலைவரை விசாரணைக்கு உட்படுத்துவோம் என மகாதீர் திங்கட்கிழமை தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அபெண்டி இவ்வாறு தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியின் தலைவரான மகாதீரைக் கண்டு தாம் பயப்படவில்லை என அவர் தெரிவித்தார். தாம் யாருக்கும் பயப்படவில்லை என்றும் இறைவன் ஒருவனுக்கே பயப்படுவதாகவும் அபெண்டி தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்கில், சேர்பிக்கப்பட்டதாக கூறப்படும் 260 கோடி ரிங்கிட் விவகாரத்தில், பிரதமர் குற்றமற்றவர் என அபெண்டி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். அதேவேளையில் ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தில் முறைக்கேடுகள் நடந்திருப்பதாக அமெரிக்க சட்டத்துறை கூறி வரும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
