கோல குபு பாரு, மே 5-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கு ஸ்பான் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ இன்று வருகை புரிந்தார். அத்தொகுதியில் இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கீழ்க்காணும் சில பரிந்துரைகளை அவர் முன் வைத்துள்ளார்.
சிலாங்கூர் மாநில அரசுக்கும் இந்தியர்களுக்குமிடையிலான தொடர்பு அற்றுப் போய் உள்ளது. வருமான பிரச்சனை மற்றும் வறுமைக்குத் தீர்வு காண மாநில அரசு வழங்கும் சமூக நல திட்டங்கள் தொடர்பில் இவர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
அதோடு மட்டுமின்றி பல தசாப்தங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் புக்கிட் தாகார், நைகல் கார்ட்னர் தோட்ட வீடமைப்பு பிரச்சனைக்கான வாக்குறுதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தீர்வு காணப்படாமல் உள்ளது. வீடமைப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதன் மூலம் இந்தியர்களின் கோபத்தைத் தணிக்க முடியும்.
தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட மக்களுக்கு ஆர்வமில்லை. மாநில அரசு போன்ற அதிகாரம் கொண்ட தரப்புகளிடம் தங்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்க இவர்கள் விரும்புகின்றனர். ஆகையால், புகார்களைத் தயார் செய்து அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான தருணம் இப்போது வந்து விட்டது.
இந்திய சமூகத்தின் பல்வேறு மனக் குறைகள் குறிப்பாக மக்கள் விரக்தியடைந்து மாற்று வழியை எதிர்பார்க்கும் போது தங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்க வேண்டும் என்று சிலர் பரிந்துரை செய்துள்ளனர்.

