சுங்கை திங்கி, மே 6-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பது சம்பந்தப்பட்ட தோட்ட மக்களின் வாழ்வில் ஒரு விடியலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
மேரி தோட்டம், நைகல் கார்ட்டன், புக்கிட் தாகார், சுங்கை திங்கி மற்றும் மிஞ்ஞாக் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகளுக்குத் தரை வீடுகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு சொன்னார்.
இத்தோட்டப் பாட்டாளிகள் கடந்த 26 ஆண்டுகளாக சொந்த வீடுகளுக்காகப் போராடி வருகின்றனர் .
அமைச்சரின் அறிவிப்பின் வழி இவர்களுக்கு புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பெர்ஜாயா மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பில் 245 தோட்டப் பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் இன்று அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகளில் இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் ஙா கூறியுள்ளார்.
8 கோடி வெள்ளி செலவில் கட்டப்படும் இந்த வீடமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு 4 கோடி வெள்ளியும் சிலாங்கூர் மாநில அரசு 3 கோடியே 50 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மீது அக்கறை செலுத்தி இந்த வீடமைப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய மானியத்தை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
இவ்வேளையில், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார் பாப்பாராயுடு.

