கோல குபு பாரு, மே 7-
26 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருக்கும் தங்களின் வீடமைப்பு பிரச்சனைக்கு சிலாங்கூர் மாநில அரசு மற்றும் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு தீர்வு காண வேண்டும் என்று பிளாட்டா ரிவர் தோட்டத்தைச் சேர்ந்த 50 பாட்டாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தோட்டப் பாட்டாளிகள் கோல குபு பாருவில் ஒன்றுகூடியதாக பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வம் தெரிவித்தார்.
வீடுகளுக்கான விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தில் கடந்த 2001ஆம் ஆண்டில் கையெழுத்திட்ட போதிலும் பெலாத்தா ரிவர் தோட்டத்தைச் சேர்ந்த 64 முன்னாள் தொழிலாளர்களுக்கு இன்னமும் வீடுகள் கிடைக்கவில்லை.
கடந்த 1994ஆம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தத்திற்கான நோட்டிஸ் அனுப்பப்பட்டதிலிருந்து இவ்விவகாரம் நீடித்துக் கொண்டு இருக்கிறது. மலிவு விலை வீடுகளுக்கான சலுகைக்கு லெம்பா பெரிங்கின் நிறுவனம் மற்றும் 64 தொழிலாளர்களுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று 2001ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.
எனினும், இந்நிறுவனம் கடந்த 2003ஆம் ஆண்டில் திவாலாகி விட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 64 தொழிலாளர்களுக்கும் பங்களா லோட்டை வழங்குவதாக 2005ஆம் ஆண்டில் லேண்ட் என் ஜெனரல் பெர். என்ற நிறுவனம் லெம்பா பெரிங்கினின் துணை நிறுவனத்திடம் உறுதியளித்தது.
இது தொடர்பில் இதுவரை எந்த மேம்பாடும் காணப்படவில்லை. தற்போது அவர்களிடம் இரு நிலங்கள் இருக்கின்றன. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போதிலும் இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண எந்தத் தரப்பும் முயற்சி எடுக்கவில்லை.
ஆகையால், அரசாங்கம் இதில் தலையிட்டு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தியாளர்களிடம் பேசிய போது அருட்செல்வம் குறிப்பிட்டார்.
-மலேசியா கினி

