Site icon அநேகன்

உலக கல்வி யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறது ஸ்ரீ முருகன் நிலையம்! -டான்ஸ்ரீ தம்பிராஜா

கோலாலம்பூர், மே 12-
நடப்பு உலக கல்வி யுகத்திற்கு ஏற்ப ஸ்ரீமுருகன் நிலையம் தனது மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தெரிவித்தார்.

தற்போது உலகம் அறிவியல், கணிதம், பொறியியல் தொழில்நுட்ப யுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்துவதே ஸ்ரீ முருகன் நிலையத்தின் தற்போதைய தலையாய பணியாகும் என்று டாக்டர் தம்பிராஜா விவரித்தார்.

நம் இந்திய சமுதாயத்தில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கக் கல்வியைப் பிரதானமாக முன்னிறுத்தி அதனுடன் சமய சாராம்சத்தை இணைத்து கடந்த 42 ஆண்டுகளாக கல்வி புரட்சியை ஏற்படுத்தி வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம். இதுவரை 28,000திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.

இந்நாட்டில் இந்தியர்கள் கல்வி மூலமாகவே முன்னேறி வெற்றியடைய முடியும். இதற்கான உந்துசக்தியும் தன்முனைப்பும் நமது சமயம் மற்றும் இந்திய பாரம்பரியத்தில் உள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் டாக்டர் எம்.தம்பிராஜா விவரித்தார்.

நமது முன்னோர்களின் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கம் போன்ற பல்வேறு வகை ஆற்றல்கள் இன்றும் நமது மரபணுவில் புதைந்துள்ளன. அவற்றைத் தட்டியெழுப்பும் தூண்டுகோல் கல்வி மட்டுமே. நமது இந்து சமயமும் பாரம்பரியமும் மனிதனை நிலையான வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியது. இந்த வெற்றியை அடைவதற்கான ஞான ஒளியைக் கொண்டுள்ள நமது இந்து சமய கலாச்சார பாரம்பரிய ரகசியத்தைக் கடந்த 42 ஆண்டு ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் நிலையம் உயிர்ப்பித்து அதனை வெற்றிக்கான தன்முனைப்பாக மாணவர்கள் மற்றும் இந்திய குடும்பங்களில் நிலைநிறுத்தி வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு கூகள் நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சையின் சிந்தனை திறன்களின் சின்னமாகவும் சுவாமி விவேகானந்தரை முன்மாதிரி குணாதிசயத்தின் அடையாளமாகவும் மாணவர்களிடையே அறிமுகம் செய்தது. பல சவால்கள் நிறைந்துள்ள இந்த காலகட்டத்தில் நம் மாணவர்கள் கல்வியிலும் திறன்களிலும் பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்குவதன் வாயிலாகவே இந்திய மாணவர்கள் எதிர்காலத்தில் சாதனை படைக்க முடியும் என மாணவர்களிடையே உரையாற்றிய டான்ஸ்ரீ தம்பிராஜா குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்நிகழ்வில் இந்து பாரம்பரியத்தின் கல்வி தத்துவங்கள் எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்கும் உலகளாவிய கல்வி திறன்கள் மற்றும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் பிரம்மாஸ்திரா வழி கற்றல் இணைய முகப்பு ஆகியவை குறித்து ஸ்ரீ முருகன் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களான ஸ்ரீ கணேஷ் ராவ், புகனேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி உரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா பேசுகையில், நிலையான கோட்பாடுகளையும் கல்வி தத்துவங்களையும் முன்நிறுத்தி இவ்வாண்டு கெடா, பினாங்கு, பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீ முருகன் நிலைய வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த கல்வி நிகழ்வில் திரளான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Exit mobile version