Site icon அநேகன்

கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே சமுதாயத்தின் பெருமை! -ஶ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி புரட்சி

பாகான் டத்தோ, மே 22-

நம் இந்தியச் சமுதாயத்தில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கக் கல்வியைப் பிரதானமாக முன்னிறுத்தி, அதனுடன் சமயக் கொள்கையை இணைத்துக் கடந்த 42 ஆண்டுகளாக நமது நாட்டில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது ஶ்ரீ முருகன் நிலையம்.

கடந்த 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஶ்ரீ முருகன் நிலையம் இது வரையிலும் 28,000க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.

இக்கல்வி பயணத்தின் ஒரு வெற்றி அடையாளமாக ஶ்ரீ முருகன் நிலையம் ‘கல்வி புரட்சி’ எனும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகின்றது. அவ்வகையில், பாகான் டத்தோ மாவட்டத்திலுள்ள 16 தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள் பயன் பெறும் வகையில் கடந்த சனிக்கிழமை (18.05.2024) ஹூத்தான் மெலிந்தாங் தேசிய வகை பாரதி தமிழ்ப்பள்ளியில் “கல்வி புரட்சி” சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை துணைப்பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். நம் இந்திய சமுதாயம் கல்வியினால் மட்டுமே உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்பதைச் சான்றாகக் கொண்டு பெற்றோர்களை மதித்தல், அவர்களைப் பெருமைப்படுத்துதல் போன்றவையே சிறந்த மாணவர்களுக்கான அடையாளம் எனக் கூறினார்.

ஶ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா உரையாற்றுகையில், ஶ்ரீ முருகன் நிலையம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகளாக பாகான் டத்தோ மாவட்டத்தில் உள்ள இந்திய மாணவர்களுக்குப் பலவகையான கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சிக்குத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேலும் உத்வேகத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கல்வி புரட்சி நிகழ்வில், 2014-ஆம் ஆண்டு பாகான் டத்தோ ஶ்ரீ முருகன் நிலையத்தில் பயின்று இன்று விமான தொழில்நுட்ப பொறியியல் துறையில் இயங்கலைப் பட்டப்படிப்பைத் மேற்கொண்டு வரும் மாணவர் ஆகாஷ் தனபாலன் மற்றும் அவரின் பெற்றோர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக ஶ்ரீ முருகன் நிலையம், பாகான் டத்தோ மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்துடன் இணைந்து இவ்வட்டாரத்தில் உள்ள 16 தமிழ்ப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக மாதாந்திர சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வகுப்பில் மாணவர்களுக்குப் பள்ளிச்சார் மதிப்பீட்டு (PBS) முறையில் சிறந்து விளங்குவதற்கான வழிக்காட்டுதல்கள், மென்திறன்களை (Soft Skills) வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள், தன்முனைப்பு அங்கங்கள் ஆகியவையும் இடம்பெறும்.

நம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல், பகுப்பாய்வுத் திறன், நுன்சிந்தனைத் திறன், படைப்பாற்றல் ஆகிய முக்கியக் கூறுகளும் இந்த வகுப்புகளில் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களை எதிர்காலவியல் சவால்களை எதிர்நோக்க, அவர்களைத் தயார்படுத்த சுய ஆளுமைத் திறன், கட்டொழுங்கு, தன்முனைப்பு ஆகியவையும் பயிற்சியளிக்கப்படுவதாக ஶ்ரீ முருகன் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் தெரிவித்தார்.

இந்தக் கல்வி புரட்சி நிகழ்வில் தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Exit mobile version