Site icon அநேகன்

ஊடகம் & ஒளிபரப்பு பயிற்சிகளுக்காக வெ.1.5 மில்லியன் ஒதுக்கீடு! –துணையமைச்சர் தியோ நி சிங்

கோலாலம்பூர், மே 24-

தொடர்பு அமைச்சின் கீழ் இயங்கும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் (இப்தார்) மூலம் அமைச்சு இவ்வாண்டும் ஊடகம் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான 70க்கும் மேற்பட்ட பயிற்சிகளுக்கு 1.5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் 18 செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு பயிற்சிகளும் அடங்கும் என்று தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

இப்பயிற்சிகளில் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் இருக்கும் அனைத்து ஊடக பயிற்சியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

“அரசு ஊழியர்களுக்கு, பதிவு ரி.ம 30, அதே சமயம், தனியார் துறையினருக்கான பதிவு அவர்கள் தேர்வு செய்யும் பயிற்சிகளைப் பொறுத்தது,” என்று அவர் மேலும் சொன்னார்.

தலைநகரில், நுண் நற்சான்றிதழ்கள் 2024 கல்வி மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சின் முயற்சிகளில், ஊடகப் பயிற்சியாளர்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவும், பின்னர் அதைத் தங்கள் ஊடகப் பணியில் செயல்படுத்தவும் இப்பயிற்சிகள் உதவும் என்றார் தியோ.

Exit mobile version