ஈப்போ, ஜூன் 22-
பல்வேறு சமூக நல திட்டங்களுக்காக ஸ்வராலயா கலாலயம் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து ‘கொஞ்சும் சலங்கை’ பரதநாட்டிய நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி ஈப்போ போலிடெக்னிக் உங்கு ஓமார் மண்டபத்தில் இன்று 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.
இதில் 30 நடனமணிகளின் பரதநாட்டிய படைப்பு இடம் பெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியை பேரா கேரிங் அசோசியேஷன், இந்து இளைஞர் அமைப்பு, நவிரா மெடிடெக் போன்ற அமைப்புகளுடன் இணைந்து ஸ்வராலயா கலாலயம் படைக்கவிருக்கிறது.
இந்நிகழ்வினைக் காண பொதுமக்கள் திரளாக அழைக்கப்படுவதாக ஸ்வராலயா சங்கீதக் கலாலய குருவும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி கேட்டுக் கொண்டார்
இதில் சிறப்பு பிரமுகர்களாக டாக்டர் சம்சுடின் அப்துல்லா, பேராசிரியர் டாக்டர் உலகநாயகி பழனி, மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் மலானி வீரையா ஆகியோர் கலந்து கொள்ள விருக்கின்றனர்.
இந்நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக 4 வயது முதல் மூத்த நடனமணிகள் தாங்கள் நடவுச் செய்த செடிகளைப் பிரமுகர்களுக்கு நினைவுச் சின்னமாக வழங்கவுள்ளனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தாவரங்களை நடவுச் செய்துப் பேணிக் காப்போம் என்ற பிரச்சாரத்திற்கு முன்னுதாரணமாக அமையவுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில், சித்தியவான் மஹா கணேசா தமிழ்ப்பள்ளி, ஈப்போ சென் புளோமினா தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்காய் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள், பள்ளி உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் வழங்கப்படும் எனவும் அவர் விவரித்தார்.
போலிடெக்னிக் உங்கு ஓமாரில் பயிலும் பி40 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் பண்பரசி கூறினார்.
இந்த கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 10 வெள்ளி முதல் 50 வெள்ளி வரை ஆகும்.
மண்டப நுழைவாசலிலும் பொதுமக்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு டாக்டர் கோ.பண்பரசி 013-6702395 .

