கோலாலம்பூர் ஜூன் 23-
அண்மைய கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்குப் பாடுபட்ட தங்களை அரசாங்கம் இப்போது சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பது குறித்து மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிருப்தி தெரிவித்தார்.
இதனால் தாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதோடு சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்று இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“தேர்தலுக்கு மட்டும் எங்களை பயன்படுத்தி கொள்வதை நாங்கள் இனி அனுமதிக்க மாட்டோம். மைபிபிபி கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் சுய மரியாதை உள்ளது” என்றார்.
” எனினும், தேசிய முன்னணிக்கு எங்களின் பிளவு படாத ஆதரவு தொடரும். அதே வேளையில், ஒற்றுமை அரசாங்கத்தையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்” என்று மைபிபிபி கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
“மைபிபிபி கட்சியை தேசிய முன்னணி ஓரம் கட்டுவது நியாயமற்றது” என்றார் அவர்.
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. மேலும், அவர்கள் சிங்கம் என்றும் நாங்கள் எலி என்றும் நினைத்துக் கொண்டாலும் பாதகமில்லை ” என்றார்.
இக்கூட்டத்தில் மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, செயலாளர் டத்தோ இண்டர் ஜிட் சிங், பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங் மற்றும் தகவல் பிரிவு துணைத் தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

