நிபோங் திபால், ஜூன் 26-
பேரா, கெரியான் மாவட்டத்திலுள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் ஒரு மாணவி பகடிவதை செய்யப்பட்ட காணொளி தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு அதுகுறித்து மேல் விசாரணை செய்யும் பொறுப்பு அமலாக்கத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாட்லினா சீடேக் தெரிவித்தார்.
விதிமுறைகளை நிர்ணயிப்பதன் வாயிலாகப் பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களுக்குத் தீர்வு காண்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட வழிகாட்டிகளையும் சீரமைக்க வேண்டும் என்றார்.
“ஆகையால் இந்த பகடிவதைச் சம்பவங்களில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் உட்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினருக்கும் நான் நினைவுறுத்துகிறேன்” என்று சுங்கை பாக்காப் சட்டமன்றத்தின் ஊடக மையத்திற்கு வருகையளித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.

