சுங்கை பூலோ, ஜூன் 29-
நாட்டின் பிரசித்தி பெற்ற கல்வி நிலையமான ஸ்ரீ முருகன் “முன்னேற்றம்” எனும் புதிய திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு நாடு முழுமையும் வறிய நிலையில் உள்ள 1,000 குடும்பங்களை மேம்படுத்த இலக்கு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிரமத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இத்தகைய குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து நிலைமையை சீர்படுத்தும் முயற்சியே “முன்னேற்றம்” என்றார் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குனர் சுரேன் கந்தா.
இத்திட்டம் மூன்று முக்கிய கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பங்களின் உணவு, ஆடை, அடிப்படை வசதிகள் மற்றும் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருதல் போன்ற தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்தல், அக்குடும்பங்கள் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்தல் மற்றும் கல்வி வாயிலாக ஏழ்மையை முற்றாக ஒழித்தல் ஆகியவையே அவை என்றார் சுரேன் கந்தா.
அந்த வகையில் முதல் குடும்பமாக இன்று சுங்கை பூலோ, கம்போங் ஸ்ரீ அமானில் வசிக்கும் விக்ரம் குடும்பத்தினரைத் தாங்கள் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
நிலையான வருமானம் இல்லாத விக்ரமிற்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். அண்ணன் பிள்ளைகள் மூவர், அக்காமார்கள் இருவர் , இவரின் மனைவி என்ன மொத்தம் 13 பேர் இரு அறைகள் கொண்ட பலகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். பள்ளி செல்லக்கூடிய நிலையில் 8 பிள்ளைகள்.
இக்குடும்பத்தினரின் நிலையைக் கருத்திற் கொண்டு குடும்பத் தலைவரான விக்ரமிற்கு புல் வெட்டும் இயந்திரத்தை தாங்கள் வாங்கிக் கொடுத்ததாக அவர் சொன்னார்.
இதன் வழி இவர் தனது வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றார்.
ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் உண்டியலிலிருந்து வழங்கிய பணம் வழி இந்த இயந்திரம் வாங்கப்பட்டதாக சுரேன் கந்தா கூறினார்.
முதற்கட்டமாக விக்ரமின் வீட்டில் தொடங்கப்பட்ட’ முன்னேற்றம்’ திட்டம் அடுத்த கட்டமாக ஜூலை 13ஆம் தேதி காப்பாரில் உள்ள குடும்பத்தில் தொடரும் என்று ஸ்ரீ முருகன் நிலைய தேசிய ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.
கல்வி ரீதியில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களை உயர்த்தும் ஸ்ரீ முருகன் நிலையத்தில் இந்த உன்னத திட்டம் நாடளாவிய நிலையில் மேற்கொள்ளப்படும் என்றார் ஸ்ரீ கணேஷ்.

