Site icon அநேகன்

மலேசிய ஊடக மன்ற மசோதா: 15ஆவது நாடாளுமன்ற மூன்றாவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் -துணையமைச்சர் தியோ

கோலாலம்பூர், ஜூலை 3-

மலேசிய ஊடக மன்ற மசோதா, 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

தொடர்பு அமைச்சு, ஊடகத் துறையின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களைக் கொண்ட மலேசிய ஊடக மன்றக் குழு, இந்த மசோதாவின் உள்ளடக்கத்தை நிறைவு செய்யும் இறுதி கட்டத்தில் உள்ளதாகக் கூறினார்.

“மசோதாவின் உள்ளடக்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகள் தெளிவாக இருப்பதை உறுதிசெய்யவும், ஊடக மன்றம் நிறுவுவது மீதான முக்கிய நோக்கத்தை பூர்த்தி செய்வதும் இதில் அடங்கும்” என்று மேலவையில் அவர் கூறினார்.

மேலவையில், தொடர்பு அமைச்சின் மனித உரிமைகள் ஆணைய சட்டம் (சுஹாகாம்) 2021 மற்றும் 2022இன் ஆண்டறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையின் நிறைவு செய்யும் அமர்வில் தியோ இவ்வாறு கூறினார்.

கடந்த மே மாதம், தேசிய சட்டத் துறை, தொடர்பு அமைச்சை மலேசிய உற்பத்தித் திறன் கழகத்திற்கு, ஓர் ஒழுங்குமுறை தாக்கப் பகுப்பாய்வை அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாக தியோ விவரித்தார்.

இந்த செயல்முறை நிறைவு கண்டதும், மலேசிய ஊடக மன்ற மசோதாவின் உள்ளடக்கம் மீண்டும் தேசிய சட்டத் துறைக்கு அனுப்பப்படும் என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“தேசிய சட்டத் துறையின் மறுஆய்வு முடிந்ததும், மலேசிய ஊடக மன்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு அமைச்சரவையில் அமைச்சு சமர்ப்பிக்கும் ” என்றார்.

Exit mobile version