கோலாலம்பூர், ஜூலை 4-
நாடு முழுவதும் இதுவரை 7,114 5ஜி தளங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் 5ஜி தொடர்பு அலையின் சேவை தற்போது 81.7 விழுக்காட்டை எட்டியுள்ளதாகத் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
தற்போதைக்கு 5ஜி சேவைக்கான கட்டுமானப் பணிகள் அதிக பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நகர்ப்புறங்களில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், கிராமப்புறங்கள் உட்பட பிற பகுதிகளுக்கும் அதன் விரிவாக்கம் தொடங்கியுள்ளது.
“கோலாலம்பூரில் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் 5ஜி தொடர்பு அலை 97.7%, புத்ராஜெயா (97.3%), சிலாங்கூர் (96.1%), ஜோகூர் (83.1%), மலாக்கா (88.6%), நெகிரி செம்பிலான் (77.5%), பினாங்கு (91.1%) மற்றும் பேராக் (79.8%)” என்று மேலவையில் தியோ கூறினார்.
கிராமப்புறங்களில் அதிவேக 5ஜி சேவைக்கான அணுகல் விகிதத்தை இன்னும் விரிவாக்க, கூடுதல் துணை மின்நிலையங்களை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் சாத் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதனிடையே, கெடாவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5ஜி தொடர்பு அலை 80.1%, பெர்லிஸ் (91.4%), பகாங் (65.5%), திரங்கானு (72.7%), கிளாந்தான் (66.4%), சபா (68.6%), லாபுவான் (94.4%) மற்றும் சரவாக் (62%) என்றார்.
அதோடு, இதன் சேவை தரம் குறித்த புகாரை எப்படி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (எம்.சி.எம்.சி) கொண்டு சேர்ப்பது குறித்த கூடுதல் கேள்வியும் மேலவையில் முன்வைக்கப்பட்டது.
சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜோஹாரியின் அந்த கூடுதல் கேள்விக்கு பதிலளித்த தியோ, எம்.சி.எம்.சி – இன் வாட்ஸ்அப் 016-2206262 எண்கள் மூலம் புகார் செய்யலாம் என்றார்.
“https://www.mcmc.gov.my/ என்ற இணையதளம் அல்லது நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள எம்.சி.எம்.சி புகார் செய்யும் முகப்பிடத்தையும் நாடலாம். இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையச் சேவையில் ஏதேனும் சிக்கல் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

