கோலாலம்பூர், ஜூலை 12-
மரணத்திற்கு இட்டுச் செல்லும் இணைய மிரட்டல் சம்பவத்திற்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இக்குற்றவாளிகள் மீது மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) மற்றும் அரச மலேசிய போலீஸ் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் உத்தரவு பிறப்பித்ததாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறினார்.
“இணைய மிரட்டல் குறித்து பிரதமர் தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார். எம்சிஎம்சி மற்றும் அரச மலேசிய போலீஸ் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்” என்றார் ஃபாமி ஃபாட்சில்.
“வருங்காலங்களில் இணைய மிரட்டல் தொடர்வதைத் தடுக்க நாங்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்” என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
கடந்த வாரம் இஷா எனும் ஏ.ராஜேஸ்வரி, (வயது 30) இணைய மிரட்டலுக்கு ஆளாகி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது.
இணைய அச்சுறுத்தல் பிரச்சனைக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்படும் 3 நடவடிக்கைகள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஃபாமி ஃபாட்சில் மேலும் கூறினார்.

