கோலாலம்பூர், ஜூலை 15-
தலைநகரில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டரசு பிரதேச இளைஞர்களின் சந்திப்பு கூட்டம் இச்சாராரின் படைப்பாற்றலுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
அதே வேளையில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கூட்டரசு பிரதேசத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்று கூட்டரசு பிரதேச கெஅடிலான் உதவி தலைவர் என்றி லாய் என்ற லாய் சென் ஹெங் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேகா முஸ்தாபாவின் ஊக்குவிப்பின் பேரில் அண்மையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இவ்வட்டார மேம்பாட்டில் இளைஞர்கள் கொண்டுள்ள ஆக்கப்பூர்வ பங்களிப்பைக் காண முடிந்ததாக அவர் கூறினார்.
இதில் கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசங்களைச் சேர்ந்த 65 இளைஞர்கள் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளம் தொழில் முனைவர்கள், இளைஞர் பிரிவு தலைவர்கள், கல்வி ஆராய்ச்சியாளர்கள் என பல துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக கெஅடிலான் வாங்சா மாஜூ தொகுதி தலைவருமான லாய் சென் ஹெங் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் இளைஞர்களின் திறன் மற்றும் நடப்பு வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காண முடிந்ததாக அவர் மேலும் சொன்னார்.
“மாண்புமிகு இளைஞர் “எனும் தலைப்பிலான இக்கூட்டம் கூட்டரசு பிரதேசத்தின் நலன் மீது மட்டுமல்லாது இளைஞர்கள் இனி வரும் கூட்டங்களில் ஆக்கப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன் வைக்கவும் உதவும் என்றார்.
இக்கூட்டத்தில் வாங்சா மாஜூவைப் பிரதிநிதித்து மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“இத்தேர்வு என்னை மனநிறைவு கொள்ளச் செய்துள்ளது. இனி வரும் கூட்டங்களில் வாங்சா மாஜூ பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வ கருத்துகளை முன் வைப்பர் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் லாய் சென் ஹெங்.
“வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள், ஊராட்சி மன்ற தேர்தல் மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் தொட்டு இவர்கள் விவேகமான கருத்துகளை வெளிப்படுத்துவர் என்று நம்புகிறேன் “ என்றார்.
முதலாவது இளைஞர் கூட்டம் வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்கிய கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேகா முஸ்தாபாவிற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

