கோலாலம்பூர் ஜூலை 15-
இந்தியர்களிடையே
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு குயில் ஜெயபக்தி நிறுவனம் புத்தக கண்காட்சியை 21ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்தி வருவதாக
உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் கூறினார்.
தேசிய நூலகம் ஜூலை மாதத்தை வாசிப்பு மாதமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து குயில் ஜெயபக்தி நிறுவனம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வகையில் குயில் ஜெயபக்தி நிறுவனம் நாடு முழுமையும் புத்தக கண்காட்சியைத் தொடங்கியிருப்பதாக இங்குள்ள விஸ்மா ஜெயபக்தியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் செல்வராஜ் பேசினார்.
மக்களிடையே வாசிப்பு பழக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதற்கு குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தக கண்காட்சி ஓரளவு பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் தமிழ் மொழி செழித்தோங்குவதற்கு குயில் ஜெயபக்தி நிறுவனம் தனது பணியைத் தொடரும் என்றார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி பார்வகியும் கலந்து கொண்டார்.

