Site icon அநேகன்

சிலாங்கூரில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்! -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-

இவ்வாண்டு மாநில அரசாங்கம்  ஏற்பாடு செய்திருக்கும் ‘ஜோப் கேர்’ கண்காட்சி வாயிலாக10, 000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த இலக்கு வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சி இவ்வாண்டு இறுதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார். 

“இத்திட்டத்தின் மூலம் 10,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு கணிப்பு மட்டுமே. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார் பாப்பாராயுடு . 

“ ஈராண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போலவே இவ்வாண்டும் இந்த வேலை வாய்ப்பு  கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கு மக்களிடமிருந்து எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் ” என்று இங்குள்ள மெனாரா பிஏசியில் பெட்டாலிங் ஜெயா நிலையிலான வேலை வாய்ப்பு கண்காட்சிக்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஷ்ரி சமிங்கோன் சிறப்பு வருகை புரிந்தார். 

இங்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 23   நிறுவனங்கள் 4,169 வேலைகளை வழங்கியதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார். 

அதே வேளையில், மூன்று நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளுடன் 10,000 வெள்ளி வரையிலான சம்பளம் வழங்க முன் வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். 

“வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்துவது அதிக செலவை உட்படுத்தும் என்பதால் அதிகமான நிறுவனங்கள் இப்போது உள்நாட்டினரின் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இது நமது பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் ”என்றார். 

Exit mobile version