கோலாலம்பூர், ஜூலை 20-
மனிதன் செம்மையாக வாழ்வதற்கு மதம் துணை புரிகிறது. இந்த மதத்தைத் தாண்டி அனைவரையும் இணைக்கக் கூடியது கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் என்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் புகழாரம் சூட்டினார்.
கவிஞர் கண்ணதாசன் வாழும்போது அவரின் பலமும் பேசப்பட்டது. பலவீனமும் பேசப்பட்டது. ஆனால், இன்றோ அவரின் பலம் மட்டுமே பேசப்படுகிறது என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன்.
“நான் நிரந்தரமானவன். அழிவதில்லை என்று கண்ணதாசன் கூறியிருந்தது காதல், நட்பு, உறவு உள்ளிட்ட வாழ்வியல் தத்துவங்களைக் கொண்ட இவரின் பாடல்கள் இன்றும் நமது மனங்களைக் கவர்ந்துள்ளதன் வழி காண முடிகிறது” என்று கிறிஸ்துவ கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டிலான ‘இயேசு காவியம் விழாவிற்குத் ‘
தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
இவ்விழா ஆண்டுதோறும் தொடரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இதற்குத் தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
“சமுதாயத்தை ஒன்று சேர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தும்படி ஏற்பாட்டாளர்களை நான் கேட்டுக்
கொள்கிறேன்” என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.
இந்நிகழ்ச்சியில், ஏற்பாட்டு குழு தலைவரும் கிறிஸ்துவ கலை இலக்கிய சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் முரசு ராஜன், தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞான சைமன் பலாக்கோங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹோ ஹீ லீ ஆகியோர் உரையாற்றினர்.
எழுத்தாளர் ஜோசப் செபஸ்தியன் அறிவிப்பில் மலர்ந்த இந்நிகழ்ச்சியில் தேவாலய பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

