புத்ராஜெயா, நவ. 19-
தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவு குழு (ஜேஎஸ்எம்எல்) மற்றும் மலேசிய சோசலிச கட்சி (பிஎஸ்எம்) ஆதரவோடு 10க்கும் மேற்பட்ட தோட்டப் பாட்டாளிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட வரைவு ஒன்றை மனித வள அமைச்சிடம் இன்று சமர்ப்பித்தனர்.
இவ்விவகாரம் குறித்து முன்னதாக அமைச்சர் ஸ்டீவன் சிமினுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் வராத காரணத்தினால் அவரின் பிரதிநிதியான எட்ரி பைசலுடன் மேற்குறிப்பிட்ட சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பல மாநிலங்களிலிருந்து தோட்டப் பாட்டாளிகளின் பிரதிநிதிகளும் ஜேஎஸ்எம்எல் மற்றும் பிஎஸ்எம் பிரதிநிதிகளும் பங்கேற்றனர் .
இந்தச் சட்டத்தை இயற்றக் கோரி 2019 ஆம் ஆண்டில் சுமார் 1000 தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் மகஜர் சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்றம் முன் திரண்டனர். ஆனால் இவ்விவகாரத்திற்கு இன்று வரை அரசாங்கம் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை. இது பாட்டாளிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் காரணமாக, ஜேஎஸ்எம்எல், மலேசியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் கருத்துகளின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட வரைவை தாமே இயற்றியது.
மலேசிய அரசாங்கம் இந்த வரைவை நாடாளுமன்றத்தில் விவாதித்து, பாட்டாளிகளின் நலன் கருதி அதைச் சட்டமாக்க வேண்டும் என்று ஜே.எஸ்.எம்.எல் கேட்டுக் கொண்டது.
இந்தச் சட்ட வரைவை எட்ரியிடம் ஜேஎஸ்எம்எல் பிரதிநிதிகளான கார்த்திகேஸ் மற்றும் டி.கணேசன் ஆகியோர் வழங்கினர்.

