ஈப்போ, நவ. 20-
இம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் 24 மணி் நேர உணவகங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று மாநில சுகாதார , மனிதவள, ஒற்றுமை துறை மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.
24 மணி நேர உணவகங்கள் பெரும்பாலானவற்றில் தூய்மைக்கேடு , பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்வது உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவற்றின் அடிப்படையில் 24 மணி நேர உணவகங்களை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்து மாநில ஆட்சிக் கூட்டத்தில் தாம் விவாதிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மனித வள சட்டத்தில் ஒரு தொழிலாளி 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். கூடுதலாக அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களும் உள்ளனர் என்றார்.
24 மணி நேர உணவகங்கள் தேவையா இல்லையா என்பது தனிப்பட்ட கருத்து. எனினும், அவை தேவையா இல்லையா என்பது பற்றி சம்பந்தப்பட்ட இலாக்காக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெலுக் இந்தான் மருத்துவ மனையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மீதான விழிப்புணர்வு நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இதனைக் கட்டுப்படுத்த “சர்க்கரை மீதான போர்” எனும் கருப்பொருளோடு பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

