Site icon அநேகன்

வழிபாட்டு தலங்களுக்கு இலவச குடிநீர் வழங்குவீர்! டாக்டர் குணராஜ் கோரிக்கை

ஷா ஆலம், நவ. 21-

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநிலத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் குடிநீரை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.

இதன் வாயிலாக வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையை அரசாங்கத்தால் குறைக்க முடியும் என்றார்.

ஆலயங்களுக்கு மறுசீரமைப்பு பணிகள், வழிபாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமய வகுப்புகளை நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது.

மானியத்தைக் குறைக்கும் பட்சத்தில் மாற்று நடவடிக்கையாக இலவசமாக குடிநீரை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தலாம் என்று மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி 60 லட்சம் வெள்ளியிலிருந்து 40 லட்சம் வெள்ளியாக குறைக்கப்பட்டது குறித்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதன் பொருட்டு இம்முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்வதோடு சாத்தியமானால் பழைய ஒதுக்கீட்டை நிலை நிறுத்தவோ அல்லது உண்மையில் நிதியுதவி தேவைப்படும் ஆலயங்களுக்கு சிறப்பு கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யும்படியும் குணராஜ் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version