ஷா ஆலம், நவ.22-
வரும் 2025ஆம் ஆண்டில் சிலாங்கூர் கட்டமைப்பு துறைக்கான ஒதுக்கீட்டை 50 மில்லியன் வெள்ளியாக அதிகரிக்கும் மாநில அரசாங்கத்தின் பரிந்துரையை பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் வரவேற்றார்.
இதன் அடிப்படையில், மலிவு விலை அடுக்குமாடி பகுதிகளில் பழுதான நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி மாநில அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
பழுதான சாலைகளை சீரமைக்க மாநில அரசு அண்மையில் ‘ஜெட்பேட்சர்’ எனும் ஆற்றல்மிக்க மற்றும் நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. சாலை பயனீட்டாளர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டையே இது காட்டுகிறது. இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
நிதி பிரச்சனை காரணமாக பழுதான சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளன. இச்சாலைகளைச் சீரமைக்க சிலாங்கூர் கட்டமைப்பு துறை உதவ வேண்டும் என்று மாநில சட்டமன்ற கூட்ட விவாதத்தின்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பழுதான சாலைகளால் ஏற்படும் விபத்துகளை இதன் வழி தவிர்க்கலாம் என்றார் வேய்ன் ஓங்.

