Site icon அநேகன்

பேராசிரியர் முனைவர் விஜயலெட்சுமி சுப்ரமணியத்தின் 6 மாணவர்கள் ‘டாக்டர்’ பட்டம் பெற்றனர்!

செர்டாங், டிச. 4-
இங்குள்ள மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (யு.பி்.எம்) 48 ஆவது பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் முனைவர் விஜயலெட்சுமி சுப்ரமணியத்தின் மேற்பார்வையில், பவித்திரா நாகராஜு, உஷா நாகசுந்தரம், அமிரா சஸ்ரினா அமினுல் ரசின், நுர் மைசாரா ரோஸ்லான், சோபிஹா அப்துல் கரிம் மற்றும் சன் ஐனா ஆகிய 6 மாணவர்கள் மொழியியல் துறையில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றனர்.

ஆறு மாணவர்களில் ஐவர் உள்நாட்டினர். சன் ஐனா என்பவர் சீனாவைச் சேர்ந்தவர்.

இவர்களில் நால்வரான பவித்திரா நாகராஜு, நுர் மைசாரா ரோஸ்லான், உஷா நாகசுந்தரம் மற்றும் சன் ஐனா குறித்த நேரத்தில் தங்கள் முனைவர் படிப்பை முடித்ததால் ஜி.ஓ.தி. எனும் விருதைப் பெற்றனர்.
அதுமட்டுமின்றி, பவித்திரா நாகராஜு, உஷா நாகசுந்தரம் மற்றும் சன் ஐனா என்கிற மூவரும் சிறந்த ஆய்வுக்கான விருதையும் பெற்றனர். இத்துறையில் முனைவர் பட்டம் எடுக்க மலாய் மொழியின் மீது அவர்கள் கொண்டுள்ள அதிக நாட்டம் மட்டுமே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதே வேளையில், மலாய் மொழியில் இளைய சமுதாயத்தினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்க என்றும் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர்.

மலேசியா புத்ரா பல்கலைக்கழக மலாய் துறையில் சுமார் 26 ஆண்டுகளாகப் பணிபுரியும் பேராசிரியர் முனைவர் விஜயலெட்சுமி சுப்ரமணியம் இதுவரை சுமார் 30 டாக்டர் பட்டம் கொண்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version